Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 76
76. உத்தவன் தூது

இதுவரை கிருஷ்ணன் பலராமன் இருவருமே எந்த பள்ளிக்கும் சென்றதாகவோ எந்த குரு விடமும் கல்வி கற்றதாக நாம் அறியவில்லை. இப்போது கம்ஸ வதம் முடிந்து பெற்றோரை சிறையிலிருந்து விடுவித்தபின் மதுரா நகரம் உக்கிரசேனரின் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின் பலராமன் கிருஷ்ணனின் குருகுல அப்பியாசம் தொடங்குகிறது. அவர்களுக்கு ஆசார்யனாக கிடைத்தவர் தான் சாந்தீபனி முனிவர்.

கிருஷ்ணன் தனது உற்ற நண்பன் உத்தவனை பிரிந்தாவனத்துக்கு அனுப்பி தனது பிரிவால் வாடும் கோப கோபியர்க்கு தக்க அறிவுரை அளிக்கச் செயகிறான் என்பது தான் இந்த தசக ஸ்லோகங்களின் கருத்து.

गत्वा सान्दीपनिमथ चतुष्षष्टिमात्रैरहोभि:
सर्वज्ञस्त्वं सह मुसलिना सर्वविद्या गृहीत्वा ।
पुत्रं नष्टं यमनिलयनादाहृतं दक्षिणार्थं
दत्वा तस्मै निजपुरमगा नादयन् पाञ्चजन्यम् ॥१॥

gatvaa saandiipanimatha chatuShShaShTi maatrairahObhiH
sarvaj~nastvaM saha musalinaa sarvavidyaagR^ihiitvaa |
putraM naShTaM yamanilayanaadaahR^itaM dakshiNaarthaM
dattvaa tasmai nijapuramagaa naadayan paa~nchajanyam || 1

க³த்வா ஸாந்தீ³பனிமத² சதுஷ்ஷஷ்டிமாத்ரைரஹோபி⁴꞉
ஸர்வஜ்ஞஸ்த்வம் ஸஹ முஸலினா ஸர்வவித்³யாம் க்³ருஹீத்வா |
புத்ரம் நஷ்டம் யமனிலயனாதா³ஹ்ருதம் த³க்ஷிணார்த²ம்
த³த்த்வா தஸ்மை நிஜபுரமகா³ நாத³யன்பாஞ்சஜன்யம் || 76-1 ||

சாந்தீபனி ரிஷியிடம் கிருஷ்ணனும் பலராமனும் கல்வி கற்றது அறுபத்து நாலு நாட்கள் மட்டுமே என்கிறார் மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி. எல்லாமே அறிந்த எல்லாமே ஆகிய கிருஷ்ணா, உனக்கு இன்னொருவர் கற்பிக்கவேண்டுமா? இருந்தாலும் உலகில் அவதரித்தபின் உனக்கும் ஒரு குரு ஒருவர் இருந்தார் என்ற புகழ் சாந்தீப முனிவருக்கு கிடைக்கச் செய்தாய். அவருடைய ஆஸ்ரமத்தில் முனிவரும் ரிஷி பத்னியும் அடைந்த ஆனந்தம் அவர்கள் உன்னிடமிருந்து பெற்றது.
முனிவரின் புத்ரனை யமலோகம் சென்று மீட்டுத் தந்தாயே அது தான் குரு தக்ஷிணையா? குருகுல வாசம் அதோடு முடிந்து மதுராவுக்கு திரும்பினாயா?

स्मृत्वा स्मृत्वा पशुपसुदृश: प्रेमभारप्रणुन्ना:
कारुण्येन त्वमपि विवश: प्राहिणोरुद्धवं तम् ।
किञ्चामुष्मै परमसुहृदे भक्तवर्याय तासां
भक्त्युद्रेकं सकलभुवने दुर्लभं दर्शयिष्यन् ॥२॥

smR^itvaa smR^itvaa pashupa sudR^ishaH premabhaaraH praNunnaaH
kaaruNyena tvamapi vivashaH praahiNOruddhavaM tam |
kinchaamuShmai paramasuhR^ide bhaktavaryaaya taasaaM
bhaktyudrekaM sakalabhuvane durlabhaM darshayiShyan || 2

ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பஶுபஸுத்³ருஶ꞉ ப்ரேமபா⁴ரப்ரணுன்னா꞉
காருண்யேன த்வமபி விவஶ꞉ ப்ராஹிணோருத்³த⁴வம் தம் |
கிஞ்சாமுஷ்மை பரமஸுஹ்ருதே³ ப⁴க்தவர்யாய தாஸாம்
ப⁴க்த்யுத்³ரேகம் ஸகலபு⁴வனே து³ர்லப⁴ம் த³ர்ஶயிஷ்யன் || 76-2 ||

கிருஷ்ணா நீ செய்யும் காரியங்கள் சொல்லும் வார்த்தைகள் வாழ்வில் எல்லோருக்கும் நல்ல படிப்பினை. உனது பிரிவை தாங்க வொண்ணாமல் துயரத்தில் ஆழ்ந்திருந்த பிருந்தாவன கோபியர்களை திசை திருப்பி அவர்கள் உலகில் தங்களது கடமையைச் செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று சங்கல்பம் செய்தாய்.. இதற்கு வழி என்ன என்று முடிவெடுத்தாய். அவர்கள் மீது கொண்ட கருணையால், அவர்கள் பக்திக்கு ஈடாக உனது உற்ற நண்பனும் பக்தனுமான உத்தவனை அழைத்தாய். ''உத்தவா பிருந்தாவனம் செல். அங்கே என் மீது அளவற்ற அன்பும் பாசமும் பக்தியும் கொண்ட கோபியர்களை நீ காண்பாய். அந்த அளவு பக்தியை வேறு எங்கும் எவரிடமும் காணமுடியாது. அவர்களிடம் எனது தூதுவனாக நீ சென்று அவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரைகளை வழங்கு.'' என்கிறாய்.

थिमपिशुनं गोकुलं प्राप्य सायं
त्वद्वार्ताभिर्बहु स रमयामास नन्दं यशोदाम् ।
प्रातर्द्दृष्ट्वा मणिमयरथं शङ्किता: पङ्कजाक्ष्य:
श्रुत्वा प्राप्तं भवदनुचरं त्यक्तकार्या: समीयु: ॥३॥

tvanmaahaatmya prathimapishunaM gOkulaM praapya saayaM
tvadvaartaabhirbahu sa ramayaamaasa nandaM yashOdaam |
praatardR^iShTvaa maNimayarathaM shankitaaH pankajaakshyaH
shrutvaa praaptaM bhavadanucharaM tyaktakaaryaaH samiiyuH || 3

த்வன்மாஹாத்ம்யப்ரதி²மபிஶுனம் கோ³குலம் ப்ராப்ய ஸாயம்
த்வத்³வார்தாபி⁴ர்ப³ஹு ஸ ரமயாமாஸ நந்த³ம் யஶோதா³ம் |
ப்ராதர்த்³ருஷ்ட்வா மணிமயரத²ம் ஶங்கிதா꞉ பங்கஜாக்ஷ்ய꞉
ஶ்ருத்வா ப்ராப்தம் ப⁴வத³னுசரம் த்யக்தகார்யா꞉ ஸமீயு꞉ || 76-3 ||

கிருஷ்ணா, உத்தவன் உன் சொல் தட்டாதவன். உடனே பிருந்தாவனம் செல்கிறான். மாலை நேரம் ஆகிவிட்டது. அந்தி வேளையில் கோகுலம், பிருந்தாவனத்தை அடைகிறான். நந்தகோபன், யசோதையின் மாளிகைக்கு செல்கிறான். ஆஹா உன்னைப் பற்றி செய்திகள் அறிந்ததும் எவ்வளவு ஆனந்தம் கொள்கிறார்கள் அந்த பெற்றோர். பொழுது விடிந்தது. கோபியர்கள் கண்ணில் நந்தகோபன் வீட்டு வாசலில் ஒரு அழகிய மணிகளினால் அலங்கரிக்கப்பட்ட தேர் நிற்பதைப் பார்த்து விட்டார்கள். ஆஹா கிருஷ்ணன் திரும்பி வந்துவிட்டான் போல் இருக்கிறது என்று கொள்ளை ஆனந்தம் அவர்களுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் கசிந்து நீ வரவில்லை, உன்னால் அனுப்பப் பட்ட உத்தவன் வந்திருக்கிறான் என்று அறிகிறார்கள். உன் சம்பந்தப்பட்ட எதுவுமே அவர்களுக்கு ஆனந்தம் தான் அல்லவா? ஓடிவருகிறார்கள். உத்தவனைக் கண்டதில் மகிழ்கிறார்கள்.

दृष्ट्वा चैनं त्वदुपमलसद्वेषभूषाभिरामं
स्मृत्वा स्मृत्वा तव विलसितान्युच्चकैस्तानि तानि ।
रुद्धालापा: कथमपि पुनर्गद्गदां वाचमूचु:
सौजन्यादीन् निजपरभिदामप्यलं विस्मरन्त्य: ॥४॥

dR^iShTvaa chainaM tvadupama lasadveShabhuuShaabhiraamaM
smR^itvaa smR^itvaa tava vilasitaanyuchchakaistaani taani |
ruddhaalaapaaH kathamapi punargadgadaaM vaachamuuchuH
saujanyaadiin nijaparabhidaamapyalaM vismarantyaH ||4

த்³ருஷ்ட்வா சைனம் த்வது³பமலஸத்³வேஷபூ⁴ஷாபி⁴ராமம்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதான்யுச்சகைஸ்தானி தானி |
ருத்³தா⁴லாபா꞉ கத²மபி புனர்க³த்³க³தா³ம் வாசமூசு꞉
ஸௌஜன்யாதீ³ன்னிஜபரபி⁴தா³மப்யலம் விஸ்மரந்த்ய꞉ || 76-4 ||

குருவாயூரப்பா, ஒரு விஷயம் எனக்கும் தெரியும், நீ ஏன் உத்தவனை அனுப்பினாய் தெரியுமா? அவன் உருவத்தில் கிட்டத்தட்ட உன்னைப் போலவே இருப்பவன். உன்னைப் போலவே அலங்கரித்து ஆடை உடுத்துபவன். உத்தவனைப் பார்த்ததும் உன் நினைவு வந்துவிட்டது பிருந்தாவன வாசிகளுக்கு. உன்னுடன் ஆடியது பாடியது ஓடியது எல்லாமே மீண்டும் நினைவில் படமாக ஓடியது. உத்தவனைக் கட்டி பிடித்துக்கொண்டு கண்ணீர் உகுத்தனர். அவன் வேற்று மனிதன் என்ற எண்ணமே அவர்களுக்கு மனதில் எழவில்லை. வார்த்தைகள் தடுமாறின, துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணீர் பெருகியது.

श्रीमान् किं त्वं पितृजनकृते प्रेषितो निर्दयेन
क्वासौ कान्तो नगरसुदृशां हा हरे नाथ पाया: ।
आश्लेषाणाममृतवपुषो हन्त ते चुम्बनाना-
मुन्मादानां कुहकवचसां विस्मरेत् कान्त का वा ॥५॥

shriiman kiM tvaM pitR^ijanakR^ite preShitO nirdayena
kvaasau kaantO nagara sudR^ishaaM haa hare naatha paayaaH |
aashleShaaNaamamR^itavapuShO hanta te chumbanaanaam
unmaadaanaaM kuhakavachasaaM vismaretkaanta kaa vaa || 5

ஶ்ரீமன் கிம் த்வம் பித்ருஜனக்ருதே ப்ரேஷிதோ நிர்த³யேன
க்வாஸௌ காந்தோ நக³ரஸுத்³ருஶாம் ஹா ஹரே நாத² பாயா꞉ |
ஆஶ்லேஷாணாமம்ருதவபுஷோ ஹந்த தே சும்ப³னானா-
முன்மாதா³னாம் குஹகவசஸாம் விஸ்மரேத்காந்த கா வா || 76-5 ||

''ஐயா, கிருஷ்ணனா உங்களை இங்கே எங்களிடம் அனுப்பியவன்? அருமையான பெற்றோருக்கு சேதி சொல்ல உன்னை அனுப்பிய அந்த கல் நெஞ்சக்காரன் எப்படி இருக்கிறான்? பெரிய நகரமான மதுராவில் எங்களை விட அழகிகள் அநேகர் நண்பர்களாக கிடைத்துவிட்டார்களா அவனுக்கு? ஹரி, மாதவா, எங்கள் தெய்வமே, எங்களைக் காத்தருள்பவனே, கருமை நிறக் கண்ணா, உன்னை நெஞ்சம் மறப்பதில்லை, உன் அன்பும் , அரவணைப்பும் எங்களை ஆனந்தத்தில் எப்போதும் நிலைத்து நிற்க செய்த இன்பத்தை மறக்கவே முடியாது. ஆஹா எவ்வளவு அற்புத மானவன் நீ. உன் வார்த்தைகளை மறக்க முடியாது. நீ தான் சொன்னதை மறந்தவன்.

रासक्रीडालुलितललितं विश्लथत्केशपाशं
मन्दोद्भिन्नश्रमजलकणं लोभनीयं त्वदङ्गम् ।
कारुण्याब्धे सकृदपि समालिङ्गितुं दर्शयेति
प्रेमोन्मादाद्भुवनमदन त्वत्प्रियास्त्वां विलेपु: ॥६॥

raasakriiDaa lulita lalitaM vishlathatkeshapaashaM
mandOdbhinna shramajalakaNaM lObhaniiyaM tvadangam |
kaaruNyaabdhe sakR^idapi samaalingituM darshayeti
premOnmaadaadbhuvanamadana tvatpriyaastvaaM vilepuH || 6

ராஸக்ரீடா³லுலிதலலிதம் விஶ்லத²த்கேஶபாஶம்
மந்தோ³த்³பி⁴ன்னஶ்ரமஜலகணம் லோப⁴னீயம் த்வத³ங்க³ம் |
காருண்யாப்³தே⁴ ஸக்ருத³பி ஸமாலிங்கி³தும் த³ர்ஶயேதி
ப்ரேமோன்மாதா³த்³பு⁴வனமத³ன த்வத்ப்ரியாஸ்த்வாம் விலேபு꞉ || 76-6 ||

கண்ணன் நினைவு கோபியரை மீண்டும் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியது. அளவிலா, எல்லையில்லா அன்புக்கும் கண்ணன் மேல் தூய பக்திக்கும் எடுத்துக் காட்டாக, ஒரு அழியாத சின்னமாக பிருந்தாவன கோபியர்கள் விளங்கினார்கள். வியர்க்க வியர்க்க உன் மயிற்பீலி செருகிய முடி கலைய எவ்வளவு நேரம் நாம் ஓடி விளையாடி இருக்கிறோம் . நீ மீண்டும் வேண்டும் எங்களுக்கு. உன்னோடு ராஸக்ரீடை மறுபடியும் தொடரவேண்டும். உன்னைக் கட்டி ஆரத் தழுவ வேண்டும். கருணைக்கடலே, கார்மேக வண்ணா, கண்ணா, வா வா.வா. மூவுலகும் உன் வசீகரத்தில் மயங்க வைப்பவனே வா.

एवंप्रायैर्विवशवचनैराकुला गोपिकास्ता-
स्त्वत्सन्देशै: प्रकृतिमनयत् सोऽथ विज्ञानगर्भै: ।
भूयस्ताभिर्मुदितमतिभिस्त्वन्मयीभिर्वधूभि-
स्तत्तद्वार्तासरसमनयत् कानिचिद्वासराणि ॥७॥

evaM praayairvivashavachanairaakulaa gOpikaastaaH
tvatsandeshaiH prakR^itimanayat sO(a)tha vij~naana garbhaiH |
bhuuyastaabhirmudita matibhistvanmayiibhirvadhuubhiH
tattadvaartaa sarasamanayat kaanichidvaasaraaNi || 7

ஏவம் ப்ராயைர்விவஶவசனைராகுலா கோ³பிகாஸ்தா꞉
த்வத்ஸந்தே³ஶை꞉ ப்ரக்ருதிமனயத்ஸோ(அ)த² விஜ்ஞானக³ர்பை⁴꞉ |
பூ⁴யஸ்தாபி⁴ர்முதி³தமதிபி⁴ஸ்த்வன்மயீபி⁴ர்வதூ⁴பி⁴-
ஸ்தத்தத்³வார்தாஸரஸமனயத்கானிசித்³வாஸராணி || 76-7 ||

உத்தவன் சரியான தூதுவன். கண்ணனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன் என்றால் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும். கோபியர் அழுது ஆஸ்வாஸம் பெற காத்திருந்தான். மெதுவாக அவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப வைத்தான். அவர்களது தூய அன்பு, பாசம், கண்ணன் மேல் பக்தி எல்லாமே அவனை ஸ்தம்பிக்க வைத்தது. எவ்வளவு சிறந்தவன் கிருஷ்ணன் என்று உணர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக கிருஷ்ணா, நீ அனுப்பிய செயதியை அவர்களுக்கு குழந்தைக்கு பால் புகட்டுவது போல் உரைத்தான். இதற்கென்றே சில நாட்கள் அங்கே தங்கி இருந்தான். உனது உரைகள் அறிவு பூர்வமானவை, ஆழ்ந்த ஞானம் கொண்டவை, உயர்ந்த தத்வம் நிறைந்தவை... அதை அந்த எளிய கோபியர்க்கு உணர்த்துவது சுலபமல்ல. அவர்கள் மனது எளிதில் திருப்தி அடையும் தன்மை கொண்டது. அவர்கள் உலகம் ரொம்ப சிறியது. அதில் அவர்களும் கண்ணா, நீயும் மட்டுமே ஜீவராசிகள். ஏனென்றால் நீ தான் அவர்களுக்கு எல்லாமே.

त्वत्प्रोद्गानै: सहितमनिशं सर्वतो गेहकृत्यं
त्वद्वार्तैव प्रसरति मिथ: सैव चोत्स्वापलापा: ।
चेष्टा: प्रायस्त्वदनुकृतयस्त्वन्मयं सर्वमेवं
दृष्ट्वा तत्र व्यमुहदधिकं विस्मयादुद्धवोऽयम् ॥८॥

tvatprOdgaanaiH sahitamanishaM sarvatO gehakR^ityaM
tvadvaartaiva prasaratimithaH saiva chOtsvaapalaapaaH |
cheShTaaH praayastvadanukR^itayastvanmayaM sarvamevaM
dR^iShTvaa tatra vyamuhadadhikaM vismayaaduddhavO(a)yam ||8

த்வத்ப்ரோத்³கா³னை꞉ ஸஹிதமனிஶம் ஸர்வதோ கே³ஹக்ருத்யம்
த்வத்³வார்தைவ ப்ரஸரதி மித²꞉ ஸைவ சோத்ஸ்வாபலாபா꞉ |
சேஷ்டா꞉ ப்ராயஸ்த்வத³னுக்ருதயஸ்த்வன்மயம் ஸர்வமேவம்
த்³ருஷ்ட்வா தத்ர வ்யமுஹத³தி⁴கம் விஸ்மயாது³த்³த⁴வோ(அ)யம் || 76-8 ||

உத்தவன் திகைத்து விட்டான். ஆஹா, இதல்லவோ பரிபூர்ண பக்தி. இந்த ஒன்றுமறியா கல்வியறிவற்ற கோபியர்களின் தூய அன்புக்கு முன் எதுவும் ஈடில்லை என்று சொல்வதறியாது ஊமையானான். அவனுக்கு இது ஆச்சர்யமான அனுபவம். கோகுலம் ஒன்றில் தான் உலகிலேயே மக்கள் தங்களது அன்றாட எந்த வேலையாகட்டும் அதை கண்ணன் நாமத்தை சொல்லியவாறு, , அவனைப் பாடிக்கொண்டே செய்பவர்கள். யார் யாரை எங்கு சந்தித்தாலும் அவர்களது பேச்சு கிருஷ்ணா, உன்னைப் பற்றியதாகவே , உன் பிரதாபமாகவே இருக்கிறதே. இதை வேறு எங்கே காணமுடியும்? உன்னைப் போலவே ஒவ்வொருவரும் தங்களது பேச்சு, செயல்கள் அனைத்திலும் இருக்கிறார்களே, உன்னையே பின்பற்றுகிறார்களே . எவ்வளவு பாதிப்பை நீ உண்டு பண்ணி யிருக்கிறாய்? தூக்கத்தில் காட்சியாக வருபவனும் நீயே என்பது அவர்கள் தூக்கத்தில் பேசுவதி லிருந்து தெரிகிறதே கிருஷ்ணா!

राधाया मे प्रियतममिदं मत्प्रियैवं ब्रवीति
त्वं किं मौनं कलयसि सखे मानिनीमत्प्रियेव।
इत्याद्येव प्रवदति सखि त्वत्प्रियो निर्जने मा-
मित्थंवादैररमदयं त्वत्प्रियामुत्पलाक्षीम् ॥९॥

raadhaayaa me priyatamamidaM matpriyaivaM braviiti
tvaM kiM maunaM kalayasi sakhe maaninii matpriyeva |
ityaadyeva pravadati sakhi tvatpriyO nirjane maam
itthaM vaadairaramayadayaM tvatpriyaamutpalaakshiim || 9

ராதா⁴யா மே ப்ரியதமமித³ம் மத்ப்ரியைவம் ப்³ரவீதி
த்வம் கிம் மௌனம் கலயஸி ஸகே² மானினீமத்ப்ரியேவ |
இத்யாத்³யேவ ப்ரவத³தி ஸகி² த்வத்ப்ரியோ நிர்ஜனே மா-
மித்த²ம்வாதை³ரரமயத³யம் த்வத்ப்ரியாமுத்பலாக்ஷீம் || 76-9 ||

உத்தவன் தாமரைக் கண்ணாள் ராதையை சந்திக்கிறான். ''ராதா தேவி, கிருஷ்ணன் உன்னை மறக்கவில்லை, உன் நினைவிலேயே வாழ்கிறான். உன்னைப் பற்றியே என்னிடம் பேசுகிறான். உன் பேச்சு, ஆடல் பாடல் அனைத்தும் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கிறான்'' நீ இதை அறிய வேண்டும்'' என்கிறான்.

एष्यामि द्रागनुपगमनं केवलं कार्यभारा-
द्विश्लेषेऽपि स्मरणदृढतासम्भवान्मास्तु खेद: ।
ब्रह्मानन्दे मिलति नचिरात् सङ्गमो वा वियोग-
स्तुल्यो व: स्यादिति तव गिरा सोऽकरोन्निर्व्यथास्ता: ॥१०॥

eShyaami draaganupagamanaM kevalaM kaaryabhaaraad
vishleShepi smaraNadR^iDhataa sambhavaanmaa(a)stu khedaH |
brahmaanande milati nachiraat sangamO vaa viyOgaH
tulyO vaH syaaditi tava giraa sO(a)karOnnirvyathaastaaH || 10

ஏஷ்யாமி த்³ராக³னுபக³மனம் கேவலம் கார்யபா⁴ரா-
த்³விஶ்லேஷே(அ)பி ஸ்மரணத்³ருட⁴தாஸம்ப⁴வான்மாஸ்து கே²த³꞉ |
ப்³ரஹ்மானந்தே³ மிலதி நசிராத்ஸங்க³மோ வா வியோக³-
ஸ்துல்யோ வ꞉ ஸ்யாதி³தி தவ கி³ரா ஸோ(அ)கரோன்னிர்வ்யதா²ஸ்தா꞉ || 76-10 ||

கிருஷ்ணன் மீண்டும் உங்களிடம் வருவான். அதை உங்களிடம் எடுத்துச் சொல்லவே என்னை அனுப்பினான். அவன் முக்கியமாக செய்யவேண்டிய காரியங்கள் அவனை உங்களிடமிருந்து சற்று தள்ளி வைத்திருக்கிறது, பிரித்திருக்கிறது, அவ்வளவு தான். வாழ்வில் இன்ப துன்பங்கள் இரண்டுமே ஒன்று என்று மெதுவாக கண்ணன் உபதேசித்ததுபோலவே உத்தவன் அந்த கோபியர்க்கு உணர்த்தி அவர்களை சமாதானப்படுத்தி துயரம் துன்பமற்றவர்களாக என்றும் இன்பத்திலேயே வாழ்பவர்களாக மாற்றி அமைத்தான்.

एवं भक्ति सकलभुवने नेक्षिता न श्रुता वा
किं शास्त्रौघै: किमिह तपसा गोपिकाभ्यो नमोऽस्तु ।
इत्यानन्दाकुलमुपगतं गोकुलादुद्धवं तं
दृष्ट्वा हृष्टो गुरुपुरपते पाहि मामामयौघात् ॥११॥

evaM bhaktiH sakalabhuvane nekshitaa na shrutaa vaa
kiM shaastraughaiH kimiha tapasaa gOpikaabhyO namO(a)stu |
ityaanandaakulamupagataM gOkulaaduddhavaM taM
dR^iShTvaa hR^iShTO gurupurapate paahi maamaamayaughaat ||11

ஏவம் ப⁴க்தி꞉ ஸகலபு⁴வனே நேக்ஷிதா ந ஶ்ருதா வா
கிம் ஶாஸ்த்ரௌகை⁴꞉ கிமிஹ தபஸா கோ³பிகாப்⁴யோ நமோ(அ)ஸ்து |
இத்யானந்தா³குலமுபக³தம் கோ³குலாது³த்³த⁴வம் தம்
த்³ருஷ்ட்வா ஹ்ருஷ்டோ கு³ருபுரபதே பாஹி மாமாமயௌகா⁴த் || 76-11 ||

தனது பிருந்தாவன விஜயத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியபின் உத்தவன் மதுராவிற்கு திரும்பி வந்தான். உன்னை சந்தித்தான்.

''ஆஹா நான் கண்ணால் கண்ட இந்த பிருந்தாவன மக்கள் போல் வேறெங்கும் பக்தர்களை கண்டதில்லை கேள்விப்பட்டதும் இல்லை என்றான். தவத்தினாலோ, வேதங்களைக் கற்றதாலோ இந்த ஆனந்த அனுபவம் அடைய ,முடியாது. தூய பக்திக்கு அவ்வளவு சக்தியா? என் சாஷ்டாங்க நமஸ்கரங்கள் கோபியரே உங்களுக்கு'' என்று கண்ணன் முன் சொன்னான் உத்தவன்.
நீ புன்முறுவலோடு அவன் சொல்வதை கேட்டு மகிழ்ந்தாய். எண்டே குருவாயூரப்பா, எவ்வளவு கருணையும் இரக்கமும் கொண்டவன் நீ, என் நோயையும் தீர்த்து எனக்கும் அருள்வாய் அப்பனே.