Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 73
மதுரா நகரப் பயணம் - 73

நிசமய்ய தவாத யாநவார்தாம் ப்ருசமார்தா: பசுபால பாலிகாஸ்தா: |
கிமிதம் கிமிதம் கதம் ந்விதீமா : ஸமவேதா: பரிதேவிதாந்யகுர்வந் || 1 ||

1. அக்ரூரருடன் தாங்கள் மதுரா நகரம் செல்லப் போவதை அறிந்த கோபியர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கவலையுடன் புலம்பினார்கள்.

கருணாநிதி ரேஷ நந்தஸூநு கதமஸ்மாந் விஸ்ருஜே தநந்யநாதா: |
பத ந: கிமு தைவமேவ மாஸீத் இதிதாஸ் த்வத்கத மாநஸா விலேபு: || 2 ||

2. நந்தகோபனின் பிள்ளை கருணையுள்ளவன் ஆயிற்றே! அவனைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விட்டுப் போகிறான்? இதுதான் தெய்வம் நமக்கு விதித்ததோ? என்று வருந்தி, உம்மிடமே மனதைச் செலுத்தி, அழுது புலம்பினார்கள்.

சரம ப்ரஹரே ப்ரதிஷ்டா மாந ஸஹபிதரா நிஜமித்ரமண்டலைச்ச |
பரிதாபபரம் நிதம் பிநீநாம் சமயிஷ்யந் வ்யமுச: ஸகாயமேகம் || 3 ||

3. அந்த இரவின் முடிவில் நந்தனுடனும், நண்பர்களுடனும் மதுரா நகரம் செல்லப் புறப்பட்டீர்கள். கோபியர்களின் துயரைத் தீர்க்க, அங்கு ஒரு தோழனை அனுப்பினீர்கள்.

அசிராதுபயாமி ஸந்நிதிம் வோ பவிதா ஸாது மயைவ ஸங்கமஸ்ரீ |
அம்ருதாம்புநிதௌ நிமஜ்ஜயிஷ்யே த்ருத மித்யாச்வஸிதா வதூரகார்ஷீ: || 4 ||

4. “நான் விரைவிலேயே தங்களிடம் திரும்பி வருவேன். என்னோடு உல்லாசமாய் இருக்கும் தருணமும் விரைவிலேயே ஏற்படும். ஆனந்தமயமான அம்ருத வெள்ளத்தில் மூழ்கடிப்பேன்” என்று கோபியர்களை சமாதானம் செய்தீர்கள்.

ஸவிஷாதபரம் ஸயாஞ்சமுச்சை ரதிதூரம் வநிதாபி ரீக்ஷ்யமாண: |
ம்ருது தத்திசி பாதயந் நபாங்காந் ஸ்பலோSக்ரூர ரதேந நிர்கதோSபூ: || 5 ||

5. அவர்களும் மிகுந்த வருத்தத்துடன், வெகுதூரம் போகும்வரையில் தங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டே பலராமனுடனும், அக்ரூரனுடனும் தேரில் ஏறிப் புறப்பட்டீர்கள்.

அநஸா பஹுலேந வல்லவாநாம் மநஸா சாநுகதோSத வல்லபாநாம் |
வநமார்தம்ருகம் விஷண்ணவ்ருக்ஷம் ஸமதீதோ யமுநாதடீ மயாஸி: || 6 ||

6. கோபர்களின் எண்ணற்ற தேர்களும், கோபியர்களின் மனங்களும் தங்களைப்
பின்தொடர்ந்தன. கானகத்திலுள்ள மிருகங்கள் வருந்தின. மரங்கள் வாடின. யமுனைக் கரையை அடைந்தீர்கள்.

நியமாய நிமஜ்ஜ்ய வாரிணி த்வா அபிவீக்ஷ்யாத ரதே பி காந்திநேய: |
விவசோSஜநி கிம்ந்விதம் விபோஸ்தே நநு சித்ரம் த்வவலோகநம் ஸமந்தாத் || 7 ||

7. அக்ரூரர், நித்ய அனுஷ்டானம் செய்வதற்காக யமுனையில் மூழ்கினார். தங்களை நீரினுள்ளேயும், வெளியே எழுந்ததும் தேரிலும் இருக்கக் கண்டார். இரண்டு இடங்களிலும் தங்கள் தரிசனம் ஏற்படுகிறதே, என்ன ஆச்சர்யம்! என்று மெய்சிலிர்த்தார்.

புநரேஷ நிமஜ்ஜ்ய புண்யசாலீ புருஷம் த்வாம் பரமம் புஜங்கபோகே |
அரிகம்புகதாம்புஜை: ஸ்ப்புரந்தம் ஸுரஸித்தௌக பரீத மாலுலோகே || 8 ||

8. மீண்டும் நீரில் மூழ்கினார். அங்கு தங்களைப் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டிருப்பவராகவும், கரங்களில் சங்கு, சக்ரம், கதை, தாமரை ஏந்தியிருப்பவராகவும் கண்டார். தேவர்களும், சித்தர்களும் தங்களைச் சூழ்ந்திருக்கக் கண்டார்.

ஸ ததா பரமாத்ம ஸௌக்க்ய ஸிந்த்தௌ விநிமக்ந: ப்ரணுவந் ப்ரகாரபேதை: |
அவிலோக்ய புநச்ச ஹர்ஷஸிந்தௌ ரநுவ்ருத்த்யா புலகாவ்ருதோ யயௌ த்வாம் || 9 ||

9. அளவற்ற ப்ரும்மானந்த வெள்ளத்தில் திளைத்தார். பிரமனாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும் உம்மைக் கண்டு ஸ்தோத்திரம் செய்தார். வைகுண்ட ஸ்வரூப காட்சியும் மறைந்தது. அனுபவித்த ஆனந்தத்தினால் மயிர்க்கூச்சலடைந்து தங்களிடம் வந்தார்.

கிமு சீதலிமா மஹாந் ஜலேயத் புளகோSஸாவிதி சோதிதேந தேந |
அதிஹர்ஷ நிருத்தரேண ஸார்த்தம் ரதாஸ பவநேச பாஹி மாம் த்வம் || 10 ||

10. அவரிடம் தாங்கள், “ இந்த யமுனையின் ஜலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறதா? உனக்கு ரோமாஞ்சம் உண்டாகியிருக்கிறதே” என்று அறியாதவர்போல் கேட்டீர்கள். அக்ரூரர், வைகுண்ட ஸ்வரூபத்தைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல், பதில் கூறாமல் இருந்தார். குருவாயூரப்பா! இவ்வாறு அக்ரூரருடன் தேரில் வீற்றிருந்த தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.