Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 49
49. பிரிந்தா வனமும் நந்தகுமாரனும்.

''போதும் போதும் இந்த கோகுல வாழ்க்கை'' என்று ஆகிவிட்டது நந்தகோபனுக்கும் யசோதைக்கும் ஒருநாளைப்போல விடாமல் ஏதேனும் ஒரு ஆபத்து குழந்தை நமது குட்டி கிருஷ்ணனுக்கு வந்து கொண்டே இருக்கிறதே. ராசியில்லாத இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது சென்றுவிடுவோம் என்று தீர்மானித்தார்கள். யமுனை நதிக்கரை அருகே துளசி வனங்கள் நிறைந்த ஒரு தனிப்பகுதியை தேர்ந்தெடுத்தார்கள். அருகே ஒரு சிறு குன்று கோவர்தன கிரி என்று இருந்தது. அந்த துளசிவனப்பகுதிக்கு பிருந்தாவனம் என்று பெயர். அங்கே குடியேறிவிட்டார்கள். ஆஹா பிரிந்தாவனமும் நந்தகுமாரனும் பிரிக்க முடியாத பெயர்கள் அல்லவா? கிருஷ்ணனுக்கு பிருந்தாவனம் ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. அங்கும் அவனுக்கு குறும்பு யாதவ சிறுவர்கள் கோஷ்டி சேர்ந்துவிட்டது ரொம்ப சௌகர்யமாக போய்விட்டது.

भवत्प्रभावाविदुरा हि गोपास्तरुप्रपातादिकमत्र गोष्ठे ।
अहेतुमुत्पातगणं विशङ्क्य प्रयातुमन्यत्र मनो वितेनु: ॥१॥

bhavatprabhaavaaviduraa hi gOpaaH taruprapaataadikamatra gOShThe |
ahetumutpaatagaNaM vishankya prayaatumanyatra manO vitenuH || 1

ப⁴வத்ப்ரபா⁴வாவிது³ரா ஹி கோ³பாஸ்தருப்ரபாதாதி³கமத்ர கோ³ஷ்டே² |
அஹேதுமுத்பாதக³ணம் விஶங்க்ய ப்ரயாதுமன்யத்ர மனோ விதேனு꞉ || 49-1 ||

வ்ரஜ பூமி கோப கோபியர் எளிமையானவர்கள். கிருஷ்ணா, உன் ப்ரபாவத்தை அறியாதவர்கள். கோகுல வாழ்க்கை அவர்களுக்கு மன நிம்மதி தராததற்கு காரணம் விடாமல் உனக்கு ஏதேனும் ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு ஆபத்து தொடர்ந்து வந்ததால் தான். கடைசியாக அந்த நெடிய பெரிய இரு மருதமரங்களில் ஒன்றாவது உன் மேல் விழுந்திருந்தால்....? போகுமிடம் வெகு தூரமில்லை. நீ வாராய் கண்ணா , இனி பிருந்தாவனத்தில் ஆனந்தமாக வாழ்வோம் என்று புறப்பட்டுவிட்டார்கள் .

तत्रोपनन्दाभिधगोपवर्यो जगौ भवत्प्रेरणयैव नूनम् ।
इत: प्रतीच्यां विपिनं मनोज्ञं वृन्दावनं नाम विराजतीति ॥२॥

tatrOpanandaabhidha gOpavaryO jagau bhavatpreraNayaiva nuunam |
itaH pratiichyaaM vipinaM manOj~naM bR^indaavanaM naama viraajatiiti || 2

தத்ரோபனந்தா³பி⁴த⁴கோ³பவர்யோ ஜகௌ³ ப⁴வத்ப்ரேரணயைவ நூனம் |
இத꞉ ப்ரதீச்யாம் விபினம் மனோஜ்ஞம் வ்ருந்தா³வனம் நாம விராஜதீதி || 49-2 ||

இந்த பிரிந்தாவனத்துக்கு செல்வோம் என்று யோசனை சொன்னவன் உபநந்தன் எனும் கோபன். ''நந்தகோபா, நாம் இருக்கும் இந்த கோகுலத்துக்கு மேற்கே, ஒரு சிறு காட்டுப்பிரதேசம் தனித்து இருக்கிறது. அதற்கு துளசிவனம் என்று பெயர், பிருந்தாவனம், அமைதியாக எவர் தொந்தரவும் இல்லாத இடம்'' என்றான். அவனை அப்படிப் பேச வைத்தவன் நீ தான் கண்ணா!

बृहद्वनं तत् खलु नन्दमुख्या विधाय गौष्ठीनमथ क्षणेन ।
त्वदन्वितत्वज्जननीनिविष्टगरिष्ठयानानुगता विचेलु: ॥३॥

bR^ihadvanaM tatkhalu nandamukhyaa vidhaaya gauShThiinamatha kshaNena |
tvadanvita tvajjananii niviShTa gariShTha yaanaanugataa vicheluH || 3

ப்³ருஹத்³வனம் தத்க²லு நந்த³முக்²யா விதா⁴ய கௌ³ஷ்டீ²னமத² க்ஷணேன |
த்வத³ன்விதத்வஜ்ஜனநீனிவிஷ்ட-க³ரிஷ்ட²யானானுக³தா விசேலு꞉ || 49-3 ||

இந்த யோசனை நந்தகோபனுக்கும் சரி என்று பட்டது . மேற்கொண்டு எந்த தாமதமும் இன்றி நந்தகோபனும் அவனது சகாக்கள் எல்லோரும் வண்டி கட்டிக்கொண்டு முக்கியமான தேவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு உன்னையும் , யசோதையையும் ஏற்றிக்கொண்டு காளை மாடு ஜோடி பூட்டிய வண்டி பிருந்தாவனம் நோக்கி ஜல் ஜல் என்று சலங்கை ஒலியோடு நடந்தது.

अनोमनोज्ञध्वनिधेनुपालीखुरप्रणादान्तरतो वधूभि: ।
भवद्विनोदालपिताक्षराणि प्रपीय नाज्ञायत मार्गदैर्घ्यम् ॥४॥

anO manOj~nadhvani dhenupaalii khurapraNaadaantaratO vadhuubhiH |
bhavadvinOdaalapitaaksharaaNi prapiiya naaj~naayata maarga dairghyam || 4

அனோமனோஜ்ஞத்⁴வனிதே⁴னுபாலீகு²ரப்ரணாதா³ந்தரதோ வதூ⁴பி⁴꞉ |
ப⁴வத்³வினோதா³லபிதாக்ஷராணி ப்ரபீய நாஜ்ஞாயத மார்க³தை³ர்க்⁴யம் || 49-4 ||

மேட்டிலும் பள்ளத்திலும் ஆடி அசைந்து கொண்டு கட கடவென்ற சப்தத்தோடு மாட்டு வண்டி நகர்ந்த அழகு, பசுக்களின் பாத குளம்புகளின் ஒலி, கலகல வென்ற உன் சிரிப்பு, வாய் ஓயாமல் மழலையில் நீ பேசும் சப்தம், இதெல்லாம் கூட வந்தவர்களுக்கு ஆனந்தம் தந்து, பிரயாணம் அலுப்போ , களைப்போ ஒன்றும் தரவில்லை அப்பா.,

निरीक्ष्य वृन्दावनमीश नन्दत्प्रसूनकुन्दप्रमुखद्रुमौघम् ।
अमोदथा: शाद्वलसान्द्रलक्ष्म्या हरिन्मणीकुट्टिमपुष्टशोभम् ॥५॥

niriikshya bR^indaavanamiisha nandatprasuuna kunda pramukhadrumaugham|
amOdathaaH shaadvala saandra lakshmyaa harinmaNii kuTTimapuShTa shObham || 5

நிரீக்ஷ்ய வ்ருந்தா³வனமீஶ நந்த³த்ப்ரஸூனகுந்த³ப்ரமுக²த்³ருமௌக⁴ம் |
அமோத³தா²꞉ ஶாத்³வலஸாந்த்³ரலக்ஷ்ம்யா ஹரின்மணீகுட்டிமபுஷ்டஶோப⁴ம் || 49-5 ||

என்னப்பா குருவாயுரா, வாதபுரீசா, பிருந்தாவனத்தை நினைத்தால் மனது எவ்வளவு சந்தோஷம் தருகிறது. எங்கும் நறுமணம் கமழும் பூத்துக்குலுங்கும் மரங்கள், கம்மென்று மூச்சு முட்டும் மல்லிகை மனோரஞ்சித மலர், மருக்கொழுந்து வாசனை, பச்சைப் பசேலென மிருதுவான புல்வெளி, பிருந்தாவனம் ஒரு மரகத பூமியோ? '' உன் பார்வையிலேயே, முக மலர்ச்சியிலேயே தெரிந்து விட்டது கண்ணா, உனக்கு பிருந்தாவனம் உன் மனதை கொள்ளைகொண்டு விட்டது என்று.

नवाकनिर्व्यूढनिवासभेदेष्वशेषगोपेषु सुखासितेषु ।
वनश्रियं गोपकिशोरपालीविमिश्रित: पर्यगलोकथास्त्वम् ॥६॥

navaaka nirvyuuDha nivaasa bhedeShvasheSha gOpeShu sukhaasiteShu |
vanashriyaM gOpakishOrapaalii vimishritaH paryagalOkathaastvam || 6

நவாகனிர்வ்யூட⁴னிவாஸபே⁴தே³-ஷ்வஶேஷகோ³பேஷு ஸுகா²ஸிதேஷு |
வனஶ்ரியம் கோ³பகிஶோரபாலீ-விமிஶ்ரித꞉ பர்யவலோகதா²ஸ்த்வம் || 49-6 ||

கோபியர்கள் ஆங்காங்கே தங்களுக்கு பிடித்த இடத்தில் அழகாக மண் குடிசை அமைத்துக் கொண்டார்கள். ஒரு அருமையான கிராமம் அங்கே உருவாகி விட்டது. கோகுலத்தில் பிரதிபலிப்பா பிருந்தாவனம்? கோபியர் வீட்டு குழந்தைகள் எல்லாரும் உன்னோடு ஒன்று சேர்ந்துவிட்டார்கள் ஓடி விளையாட. அருகே இருந்த வனப்பகுதி ஒரு வரப்பிரசாதமாக போய்விட்டது. விளையாட இப்படி ஒரு இடம் கிடைக்குமா இந்த வையகத்தில்!

अरालमार्गागतनिर्मलापां मरालकूजाकृतनर्मलापाम् ।
निरन्तरस्मेरसरोजवक्त्रां कलिन्दकन्यां समलोकयस्त्वम् ॥७॥

araalamaargaagata nirmalaapaaM maraalakuujaakR^ita narmalaapaam |
nirantarasmera sarOjavaktraaM kalindakanyaaM samalOkayastvam || 7

அராலமார்கா³க³தனிர்மலாபாம் மராலகூஜாக்ருதனர்மலாபாம் |
நிரந்தரஸ்மேரஸரோஜவக்த்ராம் கலிந்த³கன்யாம் ஸமலோகயஸ்த்வம் || 49-7 ||

கிருஷ்ணா, நீ சிறுவர்களோடு சென்று அருகே இருந்த யமுனை நதியை முதல் முதலாக பார்த்தாய். யார் இந்த யமுனை? கங்கைக்கு அடுத்த நீண்ட பெரிய புண்ய நதி. கங்கையின் உபநதி. ஹிமாசல பர்வதத்தில் பந்தர்பூச் சிகரத்தில் 29000 அடி உயரத்திலிருந்து யமுனோத்ரி எனும் இடத்திலிருந்து உற்பத்தியாகும் பெரிய ஆறு. 1400 கி.மீ. தூரம் ஓடும் நதி. முடிவில் தாய்நதி கங்கையோடு திரிவேணி சங்கமத்தில் சேர்வது. யமுனை சூரியன் காளிந்தன் மகள், எமனின் சகோதரி என்பதால் யமி என்று பெயர் பெற்றவள். வளைந்து வளைந்து அழகாக ஓடுபவள். ஆனந்தமாக பாடிக்கொண்டு ஹம்ஸங்கள் நீந்தும் அழகிய நதி. கிருஷ்ணா உன் முகம் போன்ற அழகிய தாமரை மலர்கள் தன்மேல் மிதக்க ஆடிவருபவள் யமுனை.

मयूरकेकाशतलोभनीयं मयूखमालाशबलं मणीनाम् ।
विरिञ्चलोकस्पृशमुच्चशृङ्गैर्गिरिं च गोवर्धनमैक्षथास्त्वम् ॥८॥

mayuurakekaashatalObhaniiyaM mayuukhamaalaashabalaM maNiinaam |
viri~nchalOkaspR^ishamuchchashR^iNgairgiriM chagOvardhanamaikshathaastvam || 8

மயூரகேகாஶதலோப⁴னீயம் மயூக²மாலஶப³லம் மணீனாம் |
விரிஞ்சலோகஸ்ப்ருஶமுச்சஶ்ருங்கை³-ர்கி³ரிம் ச கோ³வர்த⁴னமைக்ஷதா²ஸ்த்வம் || 49-8 ||

உனக்கு விளையாட அற்புதமாக அமைந்த இன்னொரு விஷயம் அங்கே இருந்த கோவர்தன மலை. அதில் தான் நூற்றுக்கணக்கான மயில் கூட்டம் உன்னை வரவேற்றதே , மயில் கத்துவதே ஒரு தனி அழகு, செவிக்கினிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அடிக்கடி கேட்பதற்கு ஆசையை தூண்டும் குரல் நவரத்தினங்களின் மினுமினுப்பை, பளபளப்பை மிஞ்சும் வண்ணங்கள் கொண்டவை.

समं ततो गोपकुमारकैस्त्वं समन्ततो यत्र वनान्तमागा: ।
ततस्ततस्तां कुटिलामपश्य: कलिन्दजां रागवतीमिवैकाम् ॥९॥

samaM tatO gOpakumaarakaistvam samantatO yatra vanaantamaagaaH |
tatastatastaaM kuTilaamapashyaH kalindajaaM raagavatiimivaikaam || 9

ஸமம் ததோ கோ³பகுமாரகைஸ்த்வம் ஸமந்ததோ யத்ர வனாந்தமாகா³꞉ |
ததஸ்ததஸ்தாம் க்ருடிலாமபஶ்ய꞉ கலிந்த³ஜாம் ராக³வதீமிவைகாம் || 49-9 ||

சுற்ற ஆரம்பித்துவிட்டாய் கிருஷ்ணா நீ, உனக்கு சகாக்கள் கூடி விட்டார்கள். நாலா பக்கமும் துளசிவனம் சூழ்ந்த பிருந்தாவன பிரதேசம் உன்னை ஈர்த்தது. காட்டின் ஓரத்தில் அடர்ந்த மரங்களுக்கு இடையே காளிந்தி நதி சலசலவென்று ஓடியது உன் கண்ணில் பட்டுவிட்டது. உனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தவாறு வளைந்து வளைந்து ஓடியது காளிந்தி ஆறு.

तथाविधेऽस्मिन् विपिने पशव्ये समुत्सुको वत्सगणप्रचारे ।
चरन् सरामोऽथ कुमारकैस्त्वं समीरगेहाधिप पाहि रोगात् ॥१०॥

tathaa vidhe(a)smin vipine pashavye samutsukO vatsagaNaprachaare |
charan saraamO(a)tha kumaarakaistvaM samiiragehaadhipa paahi rOgaat ||10

ததா²விதே⁴(அ)ஸ்மின்விபினே பஶவ்யே ஸமுத்ஸுகோ வத்ஸக³ணப்ரசாரே |
சரன்ஸராமோ(அ)த² குமாரகைஸ்த்வம் ஸமீரகே³ஹாதி⁴ப பாஹி ரோகா³த் || 49-10 ||

கன்றுக்குட்டிகள் மேய்வதற்கு சொகுசான இடம் அது. ஆகவே நீயும் பலராமனும், மற்ற சிறுவர்களும் இந்த இடத்துக்கு படையெடுத்தீர்கள். எண்டே குருவாயூரப்பா, உன் சந்தோஷத்துக்கு இடையில் என் கஷ்டத்தையும் சற்று கண்ணெடுத்து பார். என் தீராத இந்த வாத நோயை தீர்த்து வைத்து என்னை ரக்ஷிப்பாய்.