Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 41
41. ஸ்வர்க பூமி வாசிகள்.

என்னைப் பொறுத்தவரை, ராக்ஷஸர்களிலேயே மிகவும் மரியாதை, மதிப்பும் பெற்று , முதலிடம் வகிப்பவள், ஒரே இடம் அடைந்தவள், பூதனை தான். எத்தனையோ தாய்மார்கள் ராக்ஷஸிகளாக பெற்ற குழந்தைகளை வதைத்து, கொல்கிறார்கள். நேற்று கூட பேப்பரில் விடியோவில் பார்த்தேன். இத்தனைபேர் நடுவிலே ஒரு ராக்ஷஸியே தாயாக வந்து தான் பெறாத கண்ணனுக்கு பால் ஊட்ட வந்தாளே என்பதால், அவள் ஊட்ட விரும்பியது பால் என்கிற போர்வையில் விஷமாக இருந்தாலும் அவனை வாரி மடியில் வைத்து அணைத்து, முத்தமிட்ட ராக்ஷஸ ஜென்மம் அவள் ஒருவள் தான்.

व्रजेश्वरै: शौरिवचो निशम्य समाव्रजन्नध्वनि भीतचेता: ।
निष्पिष्टनिश्शेषतरुं निरीक्ष्य कञ्चित्पदार्थं शरणं गतस्वाम् ॥१॥

vrajeshvaraH shaurivachO nishamya samaavrajannadhvani bhiitachetaaH |
niShpiShTa nishsheShataruM niriikshya ka~nchitpadaarthaM sharaNaM
gatastvaam || 1

வ்ரஜேஶ்வர꞉ ஶௌரிவசோ நிஶம்ய ஸமாவ்ரஜன்னத்⁴வனி பீ⁴தசேதா꞉ |
நிஷ்பிஷ்டனிஶ்ஶேஷதரும் நிரீக்ஷ்ய கஞ்சித்பதா³ர்த²ம் ஶரணம் க³தஸ்த்வாம் || 41-1 ||

கோகுலமே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் திகைத்தது. நந்தகோபன் வேகமாக மதுராவிலிருந்து கோகுலம் திரும்பி வந்து கொண்டிருந்த போது வசுதேவர் சொல்லியது அவன் காதுகளில் ரீங்கார மிட்டுக் கொண்டே இருந்தது. பயத்தில், கவலையில் அவன் முகம் வெளிறியது. கை கால்கள் சக்தி இழந்து நடக்கத் தடுமாறினான். அவன் பயம் அதிகரித்தது. வழியில் பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கிடந்தன? ஏன்? என்ன உற்பாதம் நடந்தது இங்கே? அவன் மனம் ''பகவானே என்னவோ நடக்கிறதே, நீ தான் என் குழந்தையை காப்பாற்றவேண்டும்'' என்று ''உனக்காக உன்னையே ''வேண்டிக் கொண்டே இருந்தது.

निशम्य गोपीवचनादुदन्तं सर्वेऽपि गोपा भयविस्मयान्धा: ।
त्वत्पातितं घोरपिशाचदेहं देहुर्विदूरेऽथ कुठारकृत्तम् ॥२॥

nishamya gOpiivachanaadudantaM sarve(a)pi gOpaa bhayavismayaandhaaH |
tvatpaatitaM ghOrapishaacha dehaM dehurviduure(a)tha kuThaarakR^ittam || 2

நிஶம்ய கோ³பீவசனாது³த³ந்தம் ஸர்வே(அ)பி கோ³பா ப⁴யவிஸ்மயாந்தா⁴꞉ |
த்வத்பாதிதம் கோ⁴ரபிஶாசதே³ஹம் தே³ஹுர்விதூ³ரே(அ)த² குடா²ரக்ருத்தம் || 41-2 ||

எல்லா கோபிகளுக்கும் கிருஷ்ணன் செல்லம் என்பதால் அனைவருமே யசோதை வீட்டில் இருந்த தால், அங்கு நடந்த கோர சம்பவத்தை வீட்டுக்கு வந்து தத்தம் கணவன்மார்களிடம் இன்னும் அதிகமாக சுவாரஸ்யம் ஊட்டி கண்ணும் காதும் வைத்து விவரித்துச் சொன்னபோது கோபர்களும் திடுக்கிட்டார்கள். இதென்ன அக்ரமம், இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே! சிலரால் பேசவே முடியாமல் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்கள். பல கோபர்கள் ஒன்று சேர்ந்து பயத்தை அடக்கிக் கொண்டு உன்னால் கொல்லப்பட்ட அந்த பிரம்மாண்ட ராக்ஷஸி போதனையின் உடலை பல துண்டுகளாக வெட்டி தூக்கிக்கொண்டு போய் தூரமாக யமுனை நதிக்கரையில் ஒரு இடத்தில் எரித்தார்கள்.

त्वत्पीतपूतस्तनतच्छरीरात् समुच्चलन्नुच्चतरो हि धूम: ।
शङ्कामधादागरव: किमेष किं चान्दनो गौल्गुलवोऽथवेति ॥३॥

tvatpiita puutastana tachChariiraat samuchchalannuchchatarO hi dhuumaH |
shankaamadhaadaagaravaH kimeShaH kiM chaandanO gaulgulavO(a)thaveti || 3

த்வத்பீதபூதஸ்தனதச்ச²ரீரா-த்ஸமுச்சலன்னுச்சதரோ ஹி தூ⁴ம꞉ |
ஶங்காமதா⁴தா³க³ரவ꞉ கிமேஷ கிம் சாந்த³னோ கௌ³ல்கு³லவோ(அ)த²வேதி || 41-3 ||

அந்த ராக்ஷஸியின் உடல் உன் வாய் பட்டு பால் அருந்தியதால், உன் ஸ்பரிஸம் பட்டதால் புனித மாகி கொழுந்து விட்டு எரிந்து புகை உயரமாக ஆகாயத்தை தொடுவது போல் எழும்பியது. உன் தொடர்பால் அவள் உடல் சந்தனம், அகில், சாம்பிராணி புகை நறுமணத்துடன் சாம்பலாகியது.

मदङ्गसङ्गस्य फलं न दूरे क्षणेन तावत् भवतामपि स्यात् ।
इत्युल्लपन् वल्लवतल्लजेभ्य: त्वं पूतनामातनुथा: सुगन्धिम् ॥४॥

madangasangasya phalaM na duure kshaNena taavad bhavataamapi syaat |
ityullapanvallavatallajebhya-stvaM puutanaamaatanuthaassugandhim || 4

மத³ங்க³ஸங்க³ஸ்ய ப²லம் ந தூ³ரே க்ஷணேன தாவத்³ப⁴வதாமபி ஸ்யாத் |
இத்யுல்லபன்வல்லவதல்லஜேப்⁴யஸ்த்வம் பூதனாமாதனுதா²ஸ்ஸுக³ந்தி⁴ம் || 41-4 ||

குருவாயூரப்பா, இதுவும் உன் கருணை தானே . உன்னைக் கொல்ல வந்தவளுக்கு இத்தனை மரியாதையா? ராக்ஷஸி பூதனை உடலுக்கு இத்தனை மேன்மையா ! ''கோபர்களே பார்த்தீர்களா, என்னை தொட்டதாலேயே அந்த ராக்ஷஸிக்கு கிடைத்த மஹிமையை. உங்கள் எல்லோருக்கும் இன்னும் அதிக பாக்யம் இனி என்னோடு உறவாடுவதால் கிடைக்கப்போகிறது. அது வெகு தூரத்தில் இல்லை '' என்று நீ சொல்வது போல் இருந்தது.

चित्रं पिशाच्या न हत: कुमार: चित्रं पुरैवाकथि शौरिणेदम् ।
इति प्रशंसन् किल गोपलोको भवन्मुखालोकरसे न्यमाङ्क्षीत् ॥५॥

chitraM pishaachyaa na hataH kumaara-shchitraM puraivaakathi shauriNedam |
iti prashamsan kila gOpalOkO bhavanmukhaalOkarase nyamaankshiit || 5

சித்ரம் பிஶாச்யா ந ஹத꞉ குமாரஶ்சித்ரம் புரைவாகதி² ஶௌரிணேத³ம் |
இதி ப்ரஶம்ஸன்கில கோ³பலோகோ ப⁴வன்முகா²லோகரஸே ந்யமாங்க்ஷீத் || 41-5 ||

''இவனா, இந்த குட்டிப் பயலா இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தவன். எவர் உதவியும் இல்லாமல், பயமே துளியும் இல்லாமல் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே உயிரை உறிஞ்சி விட்டானே. அதிசயப்பயல் இவன் ! ஒன்றுமறி யாதவனாக நீ விளையாடிக் கொண்டிருக்கும் போது உன் முகத்தை பார்த்து அதிசயித்தார்கள். எல்லையற்ற சந்தோஷம் அடைந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரோடு பேசியது உன்னைப் பற்றியே தான்.

''நல்லவேளை அந்த ராக்ஷஸி பாவம் குட்டி கிருஷ்ணனை கொள்ளவில்லை. பகவான் கருணை தான் இது '' எப்படியோ தப்பித்தான் கிருஷ்ணன். ஏதோ திடீரென்று மாரடைப்பால் அந்த ராக்ஷஸி உடனே கீழே விழுந்து இறந்துவிட்டாள். தெய்வாதீனம் தான் இது. ஐயோ நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே. கிருஷ்ணனை நம் கண்ணெதிரிலேயே கொன்றிருப்பாளே. ஆச்சர்யத்திலேயே அதிக ஆச்சர்யம் இது தான். நந்தகோபன் வந்தது சேதி அறிந்தான். தலை சுற்றியது, கண் இருண்டது . வசுதேவர் சொன்னது எவ்வளவு உண்மை. மஹான் அவர். எவ்வளவு கவலையோடு நம் பிள்ளையைப் பற்றி சொன்னார் '' என்று நினைத்தான். அவர் பிள்ளை அவன் என்று நந்த கோபனுக்கு எப்படி தெரியும்?

दिनेदिनेऽथ प्रतिवृद्धलक्ष्मीरक्षीणमाङ्गल्यशतो व्रजोऽयम् ।
भवन्निवासादयि वासुदेव प्रमोदसान्द्र: परितो विरेजे ॥६॥

dine dine(a)tha prativR^iddhalakshmii-rakshiiNa maangalya shatO vrajOyam |
bhavannivaasaadayi vaasudeva pramOdasaandraH paritO vireje || 6

தி³னே தி³னே(அ)த² ப்ரதிவ்ருத்³த⁴லக்ஷ்மீரக்ஷீணமாங்க³ல்யஶதோ வ்ரஜோ(அ)யம் |
ப⁴வன்னிவாஸாத³யி வாஸுதே³வ ப்ரமோத³ஸாந்த்³ர꞉ பரிதோ விரேஜே || 41-6 ||

பலநாட்கள் வேகமாக ஓடின, குருவாயூரப்பா, நீ தானே அந்த வசுதேவன் மகன் வாசுதேவன். நீ இருப்பதால் அந்த வஜ்ரபூமியே செழிக்கத்தொடங்கியது. எங்கும் லக்ஷ்மிகடாக்ஷம். குறையொன்று மில்லாத கோபர்களை கோபிகளை எங்கும் பார்க்க முடிந்தது கோபாலா. எங்குமே ஆனந்தம். எவர் முகத்திலும் மகிழ்ச்சி ஒளி வீசியது. பல சூரியன்கள் கீழே, ஒரே ஒரு சூரியன் மேலே.

गृहेषु ते कोमलरूपहासमिथ:कथासङ्कुलिता: कमन्य: ।
वृत्तेषु कृत्येषु भवन्निरीक्षासमागता: प्रत्यहमत्यनन्दन् ॥७॥

gR^iheShu te kOmalaruupahaasa-mithaH kathaa sankulitaaHkamanyaH
vR^itteShu kR^ityeShu bhavanniriikshaa samaagataaH pratyahamatyanandan || 7

க்³ருஹேஷு தே கோமலரூபஹாஸமித²꞉ கதா²ஸங்குலிதா꞉ கமன்ய꞉ |
வ்ருத்தேஷு க்ருத்யேஷு ப⁴வன்னிரீக்ஷாஸமாக³தா꞉ ப்ரத்யஹமத்யனந்த³ன் || 41-7 ||

கிருஷ்ணா, வஜ்ர பூமியில் வசித்த கோபிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். தினமும் ஏதாவது பேச விஷயம் அகப்படும். இந்த பூதனை விஷயம் பல நாள் பேசும் சமாசாரமாகி விட்டது. உன் அழகு, வசீகரம், காந்த புன்னகை தான் தலைப்பு செய்தி. வேக வேகமாக தங்களது அன்றாட ஜோலிகளை முடித்துக்கொண்டு எல்லோரும் யசோதை வீட்டிலேயே பழியாக கிடப்பார்கள். போட்டி போட்டுக் கொண்டு உன்னோடு விளையாடுவார்கள். சொல்ல முடியாத அளவு சந்தோஷம் உன்னைப் பார்த்தாலேயே அவர்களுக்கு.

अहो कुमारो मयि दत्तदृष्टि: स्मितं कृतं मां प्रति वत्सकेन ।
एह्येहि मामित्युपसार्य पाणी त्वयीश किं किं न कृतं वधूभि: ॥८॥

ahO kumaarO mayi dattadR^iShTiH smitaM kR^itaM maaM prati vatsakena |
ehyehi maamittyupasaarya paaNii tvayiisha kiM kiM na kR^itaM vadhuubhiH || 8

அஹோ குமாரோ மயி த³த்தத்³ருஷ்டி꞉ ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேன |
ஏஹ்யேஹி மாமித்யுபஸார்ய பாணிம் த்வயீஶ கிம் கிம் ந க்ருதம் வதூ⁴பி⁴꞉ || 41-8 ||

''என் தெய்வமே, கைகளை ஆசையோடு விரித்துக் கொண்டு உன்னைத் தூக்கிக் கொள்ள ஓடிவரும் கோபிகளை நினைத்துப் பார்க்கிறேன்.

''அழகு செல்லமே, நீ என்னை மட்டும் தானே பார்க்கிறே. என்கிட்டே மட்டும் தானே வருவே '' என்று கொஞ்சிக்கொண்டே ஒவ்வொருவரும் உன்னை நெருங்கினார்கள்.

''இதோ பாத்தியாடி, இவன் என்னை மட்டும் பார்த்துண்டே இருக்கான், சிரிக்கிறான்''

'' இல்லேடி, என்கிட்டே தான் வரணும்னு தாவுகிறான் '', \

'அவா யாரும் வேண்டாம்டா, கண்ணப்பா, நீ என்கிட்டே மட்டும் வாடா ''

என்று பெருமையாக ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

भवद्वपु:स्पर्शनकौतुकेन करात्करं गोपवधूजनेन ।
नीतस्त्वमाताम्रसरोजमालाव्यालम्बिलोलम्बतुलामलासी: ॥९॥

bhavadvapusparshana kautukena karaatkaraM gOpavadhuujanena |
niitastvamaataamra sarOjamaalaa vyaalambilOlambatulaamalaasiiH || 9

ப⁴வத்³வபு꞉ஸ்பர்ஶனகௌதுகேன கராத்கரம் கோ³பவதூ⁴ஜனேன |
நீதஸ்த்வமாதாம்ரஸரோஜமாலா-வ்யாலம்பி³லோலம்ப³துலாமலாஸீ꞉ || 41-9 ||

''ஆஹா குருவாயூரப்பா, இந்த காட்சியை மனக்கண்ணால் உன் முன் அமர்ந்து காண்கிறேன் எனக்கு நீ அப்படி தோண்றுகிறாய் தெரியுமா? நிறைய பூக்காடாக சூழ்ந்திருக்கும் செந்தாமரை மலர்களிடையே, சுற்றிக்கொண்டு ஒவ்வொரு பூவுக்குள்ளும் அவசரம் அவசரமாக புகுந்து தேன் குடிக்க புறப்படும் தேன் வண்டு தான் அத்தனை கோபிகளிடமும் நீ கொஞ்சி குலாவியதை நினைவூட்டு கிறது. இதில் ஒரே ஒரு வித்யாசம் என்ன தெரியுமா? அங்கே பல வண்டுகள் ஒரே ஒரு மலராகிய உன்னைத்தேடி சுற்றி சுற்றி வந்தன என்பது தான் சரி. உன்னைப் பார்ப்பதே தேன் குடிப்பது போல் தானே. பந்து விளையாடும் போது அது வேகமாக ஒவ்வொரு கையாக மாறுமே, அது போல் உன்னை ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஏந்திக்கொண்டு கொஞ்சி விளையாடி னார்கள்.

निपाययन्ती स्तनमङ्कगं त्वां विलोकयन्ती वदनं हसन्ती ।
दशां यशोदा कतमां न भेजे स तादृश: पाहि हरे गदान्माम् ॥१०॥

nipaayayantii stanamankagaM tvaaM vilOkayantii vadanaM hasantii |
dashaaM yashOdaa katamaaM na bheje sa taadR^ishaH paahi hare gadaanmaam ||10

நிபாயயந்தீ ஸ்தனமங்கக³ம் த்வாம் விலோகயந்தீ வத³னம் ஹஸந்தீ |
த³ஶாம் யஶோதா³ கதமான்ன பே⁴ஜே ஸ தாத்³ருஶ꞉ பாஹி ஹரே க³தா³ன்மாம் || 41-10 ||

உன்னை மடியில் ஏந்தி, கைகளால் ஆசையோடு, பாசத்தோடு அணைத்து , முத்தமிட்டு, உனக்கு பாலூட்டினாளே அந்த யசோதை ஆஹா என்ன தவம் செய்தவள். அவள் சந்தோஷத்தை என் அல்ப வார்த்தை களால் எழுத முடியுமா கண்ணா? உன் அழகில் அவள் மூழ்கி வெகு நேரமாகி விட்டதே. உன் சிரித்த முகம் அத்தனை பேரையும் அங்கே கொள்ளை கொண்டு போய் வெகுநாளாயிற்றே. எண்டே குருவாயூரப்பா, ஹரி, எனது நோயை நீக்கி என்னையும் ரக்ஷிக்க வேண்டுமப்பா.