Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 40
40. உயிரைக் குடித்த சிசு

இந்த தசகத்தில் பூதனை எனும் கம்ஸனால் ஏவப்பட்ட அரக்கி குழந்தை கிருஷ்ணனை விஷம் தடவிய முலைப்பால் கொடுத்துக் கொல்ல கோகுலம் வந்து, முயற்சியில் தோற்று, கிருஷ்ணனால் கொல்லப் பட்டு மோக்ஷம் அடைவது பற்றி பாடுகிறார் மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி.

तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम्।
समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥

tadanu nandamamandashubhaaspadaM nR^ipapuriiM karadaanakR^ite gatam |
samavalOkya jagaada bhavatpitaa viditakamsasahaayajanOdyamaH || 1

தத³னு நந்த³மமந்த³ஶுபா⁴ஸ்பத³ம் ந்ருபபுரீம் கரதா³னக்ருதே க³தம் |
ஸமவலோக்ய ஜகா³த³ ப⁴வத்பிதா விதி³தகம்ஸஸஹாயஜனோத்³யம꞉ || 40-1 ||

குருவாயூரப்பா, எப்படியெல்லாம் நீ காயை நகர்த்துபவன் என்றறியும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

நந்தகோபன் ஒரு சிற்றரசன், குறுநில அதிகாரி. மதுராபுரி ராஜ்யத்தை சேர்ந்ததால், மன்னன் கம்ஸனுக்கு கப்பம் செலுத்த வேண்டியவன். ஆகவே அவ்வப்போது கப்பம் கட்ட மதுராபுரி வருவதால் நீ பிறந்த சமயம் ஒரு தரம் அங்கே வருகிறான். அரண்மனையில் அப்போது உன் தந்தை வசுதேவர் நந்தகோபனை பார்க்க நேரிடுகிறது. நந்தகோபன் நற்குணங்கள் நிரம்பியவன் . மதுராபுரியில் உள்ள அவனது நண்பர்கள் மூலம் அவர் கம்ஸனால் வஞ்சிக்கப்பட்டவர், தமது குழந்தைகளை பிறந்த மறுகணமே கம்ஸன் வாளுக்கு பலி கொடுத்தவர் என்று அறிந்து வருந்துகிறான். ஆகவே வசுதேவருடன் மனதில் இரக்கத்துடன் பேசுகிறான்.

अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् ।
इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥

ayi sakhe tava baalaka janma maaM sukhayate(a)dya nijaatmaja janmavat |
iti bhavatpitR^itaaM vrajanaayake samadhirOpya shashamsa tamaadaraat || 2

அயி ஸகே² தவ பா³லகஜன்ம மாம் ஸுக²யதே(அ)த்³ய நிஜாத்மஜஜன்மவத் |
இதி ப⁴வத்பித்ருதாம் வ்ரஜனாயகே ஸமதி⁴ரோப்ய ஶஶம்ஸ தமாத³ராத் || 40-2 ||

“நண்பரே, உங்களைப் பற்றி, உங்கள் பிள்ளைகளின் இழப்பு பற்றி கேள்விப்பட்டேன். உங்கள் சோகம் எனக்கு புரிகிறது. எனக்கும் ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான். அந்த மகிழ்ச்சி எவ்வளவு ஆனந்தம் தருவது என்று எனக்கு தெரியும்''
''ஆம் நந்தகோபரே , உங்கள் மகன் மிகவும் பாக்கியசாலி. அவனைப் பெற நீங்கள் புண்யம் செய்தவர்'' என்கிறார் வசுதேவர்.

इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्नि ततो लघु गम्यताम् ।
इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥

iha cha santyanimitta shataani te kaTakasiimni tatO laghu gamyataam |
iti cha tadvachasaa vrajanaayakO bhavadapaayabhiyaa druta maayayau || 3

இஹ ச ஸந்த்யனிமித்தஶதானி தே கடகஸீம்னி ததோ லகு⁴ க³ம்யதாம் |
இதி ச தத்³வசஸா வ்ரஜனாயகோ ப⁴வத³பாயபி⁴யா த்³ருதமாயயௌ || 40-3 ||

பேச்சு வாக்கில் வசுதேவர் சொல்கிறார்:
''நந்தகோபரே, இப்போது நிலைமை சரியில்லை. இங்கும் அங்கும் எங்குமே ஆபத்து சூழ்ந்துள்ளது. கெட்ட சகுனங்கள் தோன்றுகிறது. நீங்கள் ஜாக்கிரதையாக சீக்கிரமே கோகுலம் போய் சேருங்கள். என் மனதில் பட்டதைச் சொன்னேன்'' என்கிறார் வசுதேவர். இதைக் கேட்ட நந்தகோபன் மனக்கிலேசத்துடன் உடனே கோகுலம் திரும்புகிறார். அருமையான பிள்ளையாக பிறந்த உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற கவலை அவரை நடுங்க வைக்கிறது. ஓடோடி கோகுலம் வருகிறார்.

अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना ।
तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥

avasare khalu tatra cha kaachana vrajapade madhuraakR^itiranganaa |
taralaShaTpada laalita kuntalaa kapaTapOtaka te nikaTaM gataa || 4

அவஸரே க²லு தத்ர ச காசன வ்ரஜபதே³ மது⁴ராக்ருதிரங்க³னா |
தரலஷட்பத³லாலிதகுந்தலா கபடபோதக தே நிகடம் க³தா || 40-4 ||

வசுதேவர் மனதில் பட்டது நிஜமாகி விட்டது. ஏனென்றால் மதுராவில் இவர்கள் இப்படி பேசிக்கொண்டே இருக்கும்போது கோகுலத்தில் வ்ரஜபூமியில், யாரோ ஒரு புதியவள், அழகான இளம் பெண் வந்து சேருகிறாள். நந்தகோபன் வீட்டுக்குள் வந்துவிட்டாள். யசோதையை சந்தித்து, நைச்சியமாக பேசிவிட்டு, உன்னைப் பற்றி அறிந்து கொண்டு உன்னைக் காணும் ஆவலோடு உன்னருகே வந்து விட்டாள். கபட நாடக சூத்ரதாரியாகிய நீ ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தையாக அவளைப் பார்த்து பொக்கை வாயோடு சிரித்தாய்.

सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना ।
व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥

sapadi saa hR^itabaalaka chetanaa nishicharaanvayajaa kila puutanaa |
vrajavadhuuShviha keyamiti kshaNaM vimR^ishatiiShu bhavantamupaadade || 5

ஸபதி³ ஸா ஹ்ருதபா³லகசேதனா நிஶிசரான்வயஜா கில பூதனா |
வ்ரஜவதூ⁴ஷ்விஹ கேயமிதி க்ஷணம் விம்ருஶதீஷு ப⁴வந்தமுபாத³தே³ || 40-5 ||

உண்மையில் அந்த பெண், மானிடப்பெண் அல்ல. கம்ஸனால் அனுப்பப்பட்ட அரக்கி. பல குழந்தைகளின் உயிரைப் பறித்தவள். பூதனை என்ற பெயர் கொண்டவள். அழகிய இளம் பெண்ணாக உருவெடுத்து வந்தவள். ''இந்த அழகான குழந்தையை கையில் எடுத்து வைத்துக்கொள்கிறேன்'' என்று உன்னை வாரி எடுத்து கரங்களில் வைத்துக்கொண்டாள் . உனக்கு தான் அவள் யாரென்று தெரியுமே!

ललितभावविलासहृतात्मभिर्युवतिभि: प्रतिरोद्धुमपारिता ।
स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने ॥५॥

lalita bhaavavilaasahR^itaatmabhi-ryuvatibhiH pratirOddhumapaaritaa |
stanamasau bhavanaantaniSheduShii pradaduShii bhavate kapaTaatmane || 6

லலிதபா⁴வவிலாஸஹ்ருதாத்மபி⁴ர்யுவதிபி⁴꞉ ப்ரதிரோத்³து⁴மபாரிதா |
ஸ்தனமஸௌ ப⁴வனாந்தனிஷேது³ஷீ ப்ரத³து³ஷீ ப⁴வதே கபடாத்மனே || 40-6 ||

''ஆஹா, பாவம் இந்த அழகிய இளம் பெண்ணுக்கு எத்தனை ஆசை நமது கண்ணன் மேல்'' என்று மற்ற கோபியர் மெச்சி அவளை உன்னை நெருங்கி தூக்கி கையில் எடுத்து மடியில் வைத்துக் கொள்ள அனுமதித்தனர். நீ சிணுங்கினாய். பால் வேண்டும்போது அழுவாயே அந்த குரலில் ஒலித்தாய் .

'' நானும் ஒரு இளம் தாய். எனக்கும் வீட்டில் இவனைப் போல் ஒரு குழந்தை இருக்கிறது. நான் இவனுக்கு பால் ஊட்டட்டுமா. ஆசையாக இருக்கிறது' என்று மற்றவர் மனதை எப்படியோ மயக்கி அனுமதி பெற்று விட்டாள் பூதனை.

समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषित: ।
महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥

samadhiruhya tadankamashankitastvamatha baalakalOpana rOShitaH |
mahadivaamraphalaM kuchamaNDalaM pratichuchuuShitha durviShaduuShitam || 7

ஸமதி⁴ருஹ்ய தத³ங்கமஶங்கிதஸ்த்வமத² பா³லகலோபனரோஷித꞉ |
மஹதி³வாம்ரப²லம் குசமண்ட³லம் ப்ரதிசுசூஷித² து³ர்விஷதூ³ஷிதம் || 40-7 ||

''கிருஷ்ணா, நீ சர்வமும் அறிந்தவன் அறிபவன். எத்தனை குழந்தைகளை இந்த பாதகி பூதனை கொன்றிருக்கிறாள் என்று அவளைக் கண்டதுமே உனக்கு கடும் கோபம் வந்தது. பழி வாங்க இதுவே தக்க தருணம் என்று உன் நாடகத்தை ஆரம்பித்து விட்டாய். பூதனை மடியில் ஜம்மென்று ஏறி அமர்ந்து கொண்டாய். அவள் மார்பகத்தில் உன் வாயை பொருத்தி உனக்கு பூதனை தாய்ப் பாலூட்ட அனுமதித்தாய். பூதனை கொடிய விஷத்தை மார்பகம் மேல் பூசிக்கொண்டு திட்டமோடு வந்திருப்பவள். , உனது வாய் பட்ட அடுத்த சில வினாடிகளில் நீ மரணமடைய ஏற்பாடுடன் வந்தவள். பாவம் மற்றவர்கள் யாருக்கும் இது தெரியாதே. மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுவது போல் அவள் மார்பகத்தை நீ வாய் திறந்து உறிஞ்சினாய்.

असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना ।
निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥

asubhireva samaM dhayati tvayi stanamasau stanitOpama nisvanaa |
nirapatad bhayadaayi nijaM vapuH pratigataa pravisaarya bhujaavubhau || 8

அஸுபி⁴ரேவ ஸமம் த⁴யதி த்வயி ஸ்தனமஸௌ ஸ்தனிதோபமனிஸ்வனா |
நிரபதத்³ப⁴யதா³யி நிஜம் வபு꞉ ப்ரதிக³தா ப்ரவிஸார்ய பு⁴ஜாவுபௌ⁴ || 40-8 ||

''குருவாயூரப்பா, என்ன அப்படி சிரித்துக்கொண்டே என்னை பார்க்கிறாய் மாயக்காரா? அப்புறம் நடந்ததைச் சொல்கிறேன் கேள்' என்று மேலே பாடுகிறார் மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி.

''தனது தந்திரம் பலனளித்தது. வந்த காரியம் வெற்றி'' என்று பூதனை மகிழ்ந்தாள். எளிதில் உன்னைக் கொல்ல முடிந்தது என்று திருப்தி பட்டாள் . ஆனால் நடந்தது வேறு. ''வா உனக்காக தான் காத்திருக்கிறேன். நீ தான் எனது முதல் பிள்ளையார் சுழி '' என்று நீ அவள் முலைப் பாலையா உண்டாய்? அவள் உயிரையும் அல்லவோ சேர்த்து ஒரேயடியாக உறிஞ்சிவிட்டாய். சற்றும் இதை எதிர்பார்க்காததால் , தாங்கமுடியாத மரண வலியோடு ''ஹா'' என்று செவிடு பொடிபட இடி இடிப்பது போல் பெரும் கூச்சவிட்டால் பூதனை. மரணம் அவள் வேஷத்தைக் கலைத்தது. கொடிய பயங்கர ராக்ஷஸி பூதனை அங்கே கிடந்தாள். திறந்த மார்புடன், இரு கரங்களையும் நீட்டி பரப்பியபடி மலைபோல் ஒரு பெரிய உருவம் கொண்ட ராக்ஷஸி தரையில் கிடந்தாள். அவள் மார்பகத்தில் நீ பால் குடித்தபடி குழந்தையாக இருந்தாய்..

भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे ।
व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥

bhayadaghOShaNabhiiShaNa vigraha shravaNadarshana mOhita vallave |
vrajapade taduraHsthanakhelanaM nanu bhavantamagR^ihNata gOpikaaH || 9

ப⁴யத³கோ⁴ஷணபீ⁴ஷணவிக்³ரஹஶ்ரவணத³ர்ஶனமோஹிதவல்லவே |
வ்ரஜபதே³ தது³ர꞉ஸ்த²லகே²லனம் நனு ப⁴வந்தமக்³ருஹ்ணத கோ³பிகா꞉ || 40-9 ||

அவள் போட்ட சத்தத்தில் வ்ரஜ பூமியில் இருந்த அத்தனை மக்களும் என்னவோ ஏதோ ஆபத்து என்று நந்தகோபன் வீட்டுக்கு தலை தெறிக்க ஓடி வந்துவிட்டார்கள். வீடே கொள்ளாதபடி ஒரு மாபெரும் ராக்ஷஸி தரையில் பயங்கர உருவத்தோடு தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து திகைத்தார்கள். நடுங்கினார்கள். ஏதுமறியாத பச்சிளம் குழந்தையாக இறந்துகிடந்த அந்த ராக்ஷஸி பூதனையின் மார்பில் நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ''பகவானே நீ தான் இந்த சிசுவைக் காப்பாற்றினாய்'' என்று உன்னை எங்கோ தேடி வேண்டிக்கொண்டார்கள் அனைவரும்.

भुवनमङ्गलनामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षण: ।
त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥

bhuvana mangala naamabhireva te yuvatibhirbahudhaa kR^itarakshaNaH |
tvamayi vaataniketananaatha maamagadayan kuru taavaka sevakam ||10

பு⁴வனமங்க³லனாமபி⁴ரேவ தே யுவதிபி⁴ர்ப³ஹுதா⁴ க்ருதரக்ஷண꞉ |
த்வமயி வாதனிகேதனநாத² மாமக³த³யம் குரு தாவகஸேவகம் || 40-10 ||

''எண்டே குருவாயூரப்பா, நீ மூவுலகும் காத்து அருள் புரிபவன். இதை அறியாத அந்த கோபியர்கள் உன்னை பாதுகாப்பவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டு ரசித்தாய். உன்னை வாயார போற்றிப் பாடுகிறேன் என் மேலும் கருணைகொண்டு அடிமையாக ஏற்று, என் நோய் நீக்கி ரக்ஷிக்க வேண்டுமப்பா'' என்று இந்த தசகத்தை நாராயண பட்டத்ரி முடிக்கிறார்.