Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 71
71. ரெண்டு ராக்ஷஸர்களின் விஜயம்.

இதோ இன்னொரு அசுரன், ராக்ஷஸன், விளக்கில் தானே வந்து மடியும் வீட்டில் பூச்சியாக வேகமாக வந்துவிட்டான். குதிரை என்றால் வேகம் தானே. மின்சாரத்தில் கூட மின் வேகத்தை HP ஹார்ஸ் பவர் என்று தானே கூறுகிறோம். அவனைத்தொடர்ந்து இன்னொரு தந்திர திருடன். இந்த தசகத்தில் நாராயண பட்டத்ரி இவர்களைப் பற்றி ஒரு சுகமான அனுபவம் தருகிறார். ரசியுங்கள்:

यत्नेषु सर्वेष्वपि नावकेशी केशी स भोजेशितुरिष्टबन्धु: ।
त्वां सिन्धुजावाप्य इतीव मत्वा सम्प्राप्तवान् सिन्धुजवाजिरूप: ॥१॥

yatneShu sarveShvapi naavakeshii keshii sa bhOjeshituriShTabandhuH |
tvaM sindhujaavaapya itiiva matvaa sampraaptavaan sindhujavaajiruupaH || 1

யத்னேஷு ஸர்வேஷ்வபி நாவகேஶீ கேஶீ ஸ போ⁴ஜேஶிதுரிஷ்டப³ந்து⁴꞉ |
த்வம் ஸிந்து⁴ஜாவாப்ய இதீவ மத்வா ஸம்ப்ராப்தவான்ஸிந்து⁴ஜவாஜிரூப꞉ || 71-1 ||

நாராயணா, உன் சாகசத்தில் இது இன்னொறு ராக்ஷஸ வதம் அல்லவா. உனக்கு ஞாபகப்படுத்துகிறேன் கேள். . உன் செயலை நினைத்துப் பார்த்து நீயே மகிழ்வாயாக. அவன் பேர் கேசி. ஒரு பலம் மிகுந்த ராக்ஷஸன். கம்சனின் உற்ற நண்பன். ஒருநாள் கம்சனைப் பார்க்கும்போது ''என்னடா கம்ஸா, எப்போதும் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டே வருத்தமாக இருக்கிறாய். உன் மனதில் எப்போதும் அந்த கிருஷ்ணன் என்கிற பயல் நினைவு தானே. இதோ நான் போய் அவனை முடித்து விடுகிறேன். போதுமா. ரொம்ப சின்ன வேலை எனக்கு அது.
இதோ பார் கம்ஸா, கவலையை விடு, சிந்தி தேசத்து குதிரைகளுக்கு நல்ல மதிப்பு உண்டு வ்ரஜ பூமிக்காரர்களிடம். நான் அங்கிருந்து ஓடி வந்த ஒரு குதிரையாகச் சென்று கிருஷ்ணனை மயக்கி தனியே கூட்டிச் சென்று தீர்த்துக் கட்டிவிடுகிறேன். விரைவில் நல்ல செயதியோடு உன்னை சந்திக்கிறேன் என்றான் கேசி.

गन्धर्वतामेष गतोऽपि रूक्षैर्नादै: समुद्वेजितसर्वलोक: ।
भवद्विलोकावधि गोपवाटीं प्रमर्द्य पाप: पुनरापतत्त्वाम् ॥२॥

gandharvataameSha gatO(a)pi ruukshairnaadaiH samudvejita sarvalOkaH |
bhavadvilOkaavadhi gOpavaaTiiM pramardya paapaH punaraapatattvaam || 2

க³ந்த⁴ர்வதாமேஷ க³தோ(அ)பி ரூக்ஷைர்னாதை³꞉ ஸமுத்³வேஜிதஸர்வலோக꞉ |
ப⁴வத்³விலோகாவதி⁴ கோ³பவாடீம் ப்ரமர்த்³ய பாப꞉ புனராபதத்த்வாம் || 71-2 ||

கிருஷ்ணா, ஒருநாள் மாலை பிருந்தாவனத்தில் உரக்க குதிரை கனைக்கும் சத்தம் கோபர்களை கதி கலங்கச் செய்தது. திடீரென்று ஒரு குதிரை கனைப்பது அவர்களுக்கு புதிய அனுபவம். கேசி தான் அந்த குதிரையாக வந்தவன். வெகு வேகமாக காற்றைப்போல் பறந்து நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தான் கேசி. அவன் காலில் மிதிபட்டு சாகாமல் கோபர்கள் அங்குமிங்கும் ஓடி ஒதுங்கினார்கள். சிலர் நீ இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தார்கள்.

तार्क्ष्यार्पिताङ्घ्रेस्तव तार्क्ष्य एष चिक्षेप वक्षोभुवि नाम पादम् ।
भृगो: पदाघातकथां निशम्य स्वेनापि शक्यं तदितीव मोहात् ॥३॥

taarkshyaarpitaanghrestava taarkshya eSha chikshepa vakshObhuvi naamapaadam |
bhR^igOH padaaghaata kathaaM nishamya svenaapi shakyaM taditiiva mOhaat || 3

தார்க்ஷ்யார்பிதாங்க்⁴ரேஸ்தவ தார்க்ஷ்ய ஏஷ சிக்ஷேப வக்ஷோபு⁴வி நாம பாத³ம் |
ப்⁴ருகோ³꞉ பதா³கா⁴தகதா²ம் நிஶம்ய ஸ்வேனாபி ஶக்யம் ததி³தீவ மோஹாத் || 71-3 ||

கேசி சும்மா இருக்காமல் உன்னருகே வந்துவிட்டான். உன்னை உதைத்தான். உன்னைக் கீழே தள்ளி உன் மார்பில் ஒரு கால் வைத்து உதைத்து மிதிக்க எண்ணினான். .ஒருவேளை கேசிக்கு, முன் ஒருகாலத்தில் பிருகு என்கிற முனிவர் கூட தனது காலால் உன் மார்பில் உதைத்தாரே, அது போலவே நாமும் உதைக்கலாம் என்று தோன்றியதோ என்னவோ?

प्रवञ्चयन्नस्य खुराञ्चलं द्रागमुञ्च चिक्षेपिथ दूरदूरम्
सम्मूर्च्छितोऽपि ह्यतिमूर्च्छितेन क्रोधोष्मणा खादितुमाद्रुतस्त्वाम् ॥४॥

prava~nchayannasya khuraa~nchalaM draak amuM cha chikshepitha duuraduuram |
sammuurchChitO(a)pi hyatimuurchChitena krOdhOShmaNaakhaaditumaadrutastvaam || 4

ப்ரவஞ்சயன்னஸ்ய கு²ராஞ்சலம் த்³ராக³மும் ச சிக்ஷேபித² தூ³ரதூ³ரம் |
ஸம்மூர்சி²தோ(அ)பி ஹ்யதிமூர்சி²தேன க்ரோதோ⁴ஷ்மணா கா²தி³துமாத்³ருதஸ்த்வாம் || 71-4 ||

நீ த்ரிகாலமும் உணர்ந்தவனாயிற்றே, கேசியின் எண்ணம் புரியாதா உனக்கு? வெகு லாகவமாக அவன் கால் உன் மேல் படாமல் நெளிந்தாய். தவிர்த்தாய். அவன் வந்த வேகத்தை உபயோகித்து அப்படியே அவனைப் புரட்டி போட்டு விழச்செயதாய். வெகு தூரத்தில் போய் விழுந்தான் கேசி. ஒரு க்ஷணம் திகைத்து, மயக்க நிலை அடைந்தவன் சுதாரித்துக் கொண்டான். கோபம் பன்மடங்கு அதிகமாயிற்று கேசிக்கு. பற்களைக் கடித்தான். அங்கிருந்து வேகமாக ஓடிவந்து உன் மேல் பாய்ந்தான்.

त्वं वाहदण्डे कृतधीश्च वाहादण्डं न्यधास्तस्य मुखे तदानीम् ।
तद् वृद्धिरुद्धश्वसनो गतासु: सप्तीभवन्नप्ययमैक्यमागात् ॥५॥

tvaM vaahadaNDe kR^itadhiishcha baahaa daNDaM nyadhaastasyamukhetadaaniim |
tadvR^iddhiruddha shvasanO gataasuH saptii bhavannapyayamaikyamaagaat || 5

த்வம் வாஹத³ண்டே³ க்ருததீ⁴ஶ்ச வாஹாத³ண்ட³ம் ந்யதா⁴ஸ்தஸ்ய முகே² ததா³னீம் |
தத்³வ்ருத்³தி⁴ருத்³த⁴ஶ்வஸனோ க³தாஸு꞉ ஸப்தீப⁴வன்னப்யயமைக்யமாகா³த் || 71-5 ||

கேசிக்கு முடிவு வந்துவிட்டது என்று நீ தீர்மானித்து விட்டாய் குருவாயூரப்பா, வாயைப்பிளந்து ஓடிவந்தவன் வாயில் உன் கையை நுழைத்தாய். அவன் வாயில் நுழைத்த உன் கை ப்ரம்மாண்டமாயிற்று. அவன் மூச்சுக்குழாயைத் தடுத்து அடைத்தது. சில நிமிஷங்களில் மூச்சுத் திணறி கண்கள் மயங்க உடல் நடுங்க கேசி துடித்து விழுந்தான். இப்போது அவன் உயிரற்ற ராக்ஷஸன். உன் கரம் பட்டு முக்தி அடைந்தவர்களில் அவனும் ஒருவனாகிவிட்டான்.

आलम्भमात्रेण पशो: सुराणां प्रसादके नूत्न इवाश्वमेधे ।
कृते त्वया हर्षवशात् सुरेन्द्रास्त्वां तुष्टुवु: केशवनामधेयम् ॥६॥

aalambha maatreNa pashOH suraaNaaM prasaadake nuutna ivaashvamedhe |
kR^ite tvayaa harShavashaat surendraastvaaM tuShTuvuH keshava naamadheyam ||6

ஆலம்ப⁴மாத்ரேண பஶோ꞉ ஸுராணாம் ப்ரஸாத³கே நூத்ன இவாஶ்வமேதே⁴ |
க்ருதே த்வயா ஹர்ஷவஶாத்ஸுரேந்த்³ராஸ்த்வாம் துஷ்டுவு꞉ கேஶவனாமதே⁴யம் || 71-6 ||

கிருஷ்ணா, அஸ்வமேத யாகம் பண்ணுகிறவர்கள் ஒரு சிறந்த குதிரையை தேர்ந்தெடுத்து திக் விஜயத்திற்கு அனுப்பி அதை யாகத்தில் கடைசியில் பலியிடுவது பற்றி அறிவோம். நீ செய்தது விசித்திர அஸ்வமேத யாகமாக இருக்கிறதே. உன் ராக்ஷச நிக்ரஹ யஞத்தில் கேசி ஒரு புது மாதிரியான அஸ்வமேத யாக குதிரையாக அல்லவோ மாறிவிட்டான்! கேசி மாண்டதில் மகிழ்ந்து வழக்கம் போல் தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். உன்னை வணங்கினார்கள். அந்த நாள் முதல் இந்த கேசியால் உனக்கு ஒரு புது பெயர் வேறு உண்டாகிவிட்டது கிருஷ்ணா. இனி மேல் நீ ''கேசவன்''!!. எண்ணற்ற கேசவன் என்ற பெயருடன் ஹிந்துக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். எத்தனை பேருக்கு தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள இந்த கேசி கதை தெரியுமோ?

கேசவா என்று என்னோடு சேர்த்து எத்தனை கோடி பக்தர்கள் உன்னை போற்றி உன் நாமத்தை ஜெபிக்கிறார்கள். த்வாதஸ நாமாக்களில் முக்கிய முதல் நாமமாக கேசவா என்று உன் பெயர் இடம்பெற காரணமாக இருந்த ராக்ஷஸன் அந்த கேசி நிச்சயம் ஒரு புண்யம் பண்ணின குதிரை ராக்ஷஸன் தான். சந்தேகமே இல்லை. .

कंसाय ते शौरिसुतत्वमुक्त्वा तं तद्वधोत्कं प्रतिरुध्य वाचा।
प्राप्तेन केशिक्षपणावसाने श्रीनारदेन त्वमभिष्टुतोऽभू: ॥७॥

kamsaaya te shaurisutatva muktvaa taM tadvadhOtkaM pratirudhya vaachaa |
praaptena keshikshapaNaavasaane shriinaaradena tvamabhiShTutO(a)bhuuH || 7

கம்ஸாய தே ஶௌரிஸுதத்வமுக்த்வா தம் தத்³வதோ⁴த்கம் ப்ரதிருத்⁴ய வாசா |
ப்ராப்தேன கேஶிக்ஷபணாவஸானே ஶ்ரீனாரதே³ன த்வமபி⁴ஷ்டுதோ(அ)பூ⁴꞉ || 71-7 ||

கிருஷ்ணா, உன் பிரதம பக்தர் நாரதரைப் பற்றி நன்றாக தெரியுமே. அவர் தானே கம்சனை சந்தித்து நீ வசுதேவன் பிள்ளை வாசுதேவன் என்று சொல்லியது. கம்சன் வசுதேவரைக் கொல்லாமல் காப்பாற்றியதும் கூட. அந்த நாரதர் கேசி உன்னால் மரணத்தை தழுவியபோது வந்துவிட்டார். வந்து உன்னைப் போற்றி வணங்கியவர் அல்லவா?

कदापि गोपै: सह काननान्ते निलायनक्रीडनलोलुपं त्वाम् ।
मयात्मज: प्राप दुरन्तमायो व्योमाभिधो व्योमचरोपरोधी ॥८॥

kadaa(a)pi gOpaiH saha kaananaante nilaayana kriiDana lOlupaM tvaam |
mayaatmajaH praapa durantamaayO vyOmaabhidhO vyOmacharOparOdhii || 8

கதா³பி கோ³பை꞉ ஸஹ கானநாந்தே நிலாயனக்ரீட³னலோலுபம் த்வாம் |
மயாத்மஜ꞉ ப்ராப து³ரந்தமாயோ வ்யோமாபி⁴தோ⁴ வ்யோமசரோபரோதீ⁴ || 71-8 ||

குருவாயூரப்பா, கேசியைத் தொடர்ந்து இன்னொரு ராக்ஷஸனும் வரிசையில் அடுத்ததாக உன்னால் மரணமடைய தயாராக வந்து நின்றான். அவன் ஒரு மாயாஜாலக்காரன். மயன் எனும் விண்ணுலக சிற்பியின் மகன். இந்த ராக்ஷஸன் பெயர் வியோமன். இவன் மஹா தந்திரக்காரன் என்பது பிரசித்தம். நீயும் உன் நண்பர்களும் ஓடிப்பிடித்து, ஒளிந்து கொண்டு பிடிப்பது, திருடன் போலீஸ்காரன் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது உன் நண்பர்களில் ஒருவனைப் போல நைஸாக உள்ளே கூட்டத்தில் சேர்ந்து விளையாடியவன்.

स चोरपालायितवल्लवेषु चोरायितो गोपशिशून् पशूंश्च
गुहासु कृत्वा पिदधे शिलाभिस्त्वया च बुद्ध्वा परिमर्दितोऽभूत् ॥९॥

sa chOrapaalaayita vallaveShu chOraayitO gOpashishuun pashuumshcha |
guhaasu kR^itvaa pidadhe shilaabhiH tvayaa cha buddhvaaparimarditO(a)bhuut || 9

ஸ சோரபாலாயிதவல்லவேஷு சோராயிதோ கோ³பஶிஶூன்பஶூம்ஶ்ச |
கு³ஹாஸு க்ருத்வா பித³தே⁴ ஶிலாபி⁴ஸ்த்வயா ச பு³த்³த்⁴வா பரிமர்தி³தோ(அ)பூ⁴த் || 71-9 ||

இந்த விளையாட்டில் ஒரு சௌகர்யம் எல்லோரும் தனித்தனியே ஓடி ஒளிந்து கொள்வது. இதை உபயோகித்து வியோமாசுரன் திருடன் போலீஸ் காரன் விளையாட்டில் திருடர்களில் ஒருவனாக ஓடி ஒளிந்து கொள்ளும்போது உன் நண்பர்கள் எல்லா கோபர்களையும் அவர்களது பசுக்களையும் கடத்தி ஒரு குகையில் ஒளித்து வைத்து விட்டான். குகைவாயிலை ஒரு பெரிய பாறையால் மூடிவிட்டான், உன்னையும் அவ்வாறு கடத்தியோ, தனிப்படுத்தி கொல்லவோ திட்டம் போட்டான். அது பலிக்கவில்லை. ஆரம்பத்திலேயே நீ அவன் உங்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவன் அல்ல என்று கண்டுபிடித்துவிட்டாயே. மேலும் உன் நண்பர்கள் பசுக்கள் எண்ணிக்கையில் குறைவதையும் கவனித்தவன். ஆகவே அவன் உன்னை நெருங்கிவரும்போது அவனை அருகே வரவிட்டாய். தக்கநேரத்தில் அவன் உன் நண்பர்களையும் பசுக்களையும் ஒளித்துவைத்திருந்த குகையைக் கண்டுபிடித்து, அவனாலேயே குகையை மூடியிருந்த பாறையை விலக்க வைத்து உன் நண்பர்களையும் அத்தனை பசுக்களையும் மீட்டாய். அவன் திட்டத்துக்கு பரிசாக அவனுக்கு மரணத்தை அளித்தாய்.

एवं विधैश्चाद्भुतकेलिभेदैरानन्दमूर्च्छामतुलां व्रजस्य ।
पदे पदे नूतनयन्नसीमां परात्मरूपिन् पवनेश पाया: ॥१०॥

evaM vidhaishchaadbhuta kelibhedaiH aanandamuurchChaamatulaaM vrajasya |
pade pade nuutanayannasiimaaM paraatmaruupin pavanesha paayaaH ||10

ஏவம்விதை⁴ஶ்சாத்³பு⁴தகேலிபே⁴தை³ரானந்த³மூர்சா²மதுலாம் வ்ரஜஸ்ய |
பதே³ பதே³ நூதனயன்னஸீமாம் பராத்மரூபின் பவனேஶ பாயா꞉ || 71-10 ||

எண்டே குருவாயூரப்பா, நீ மஹா மாயன், உன் விளையாட்டுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை. அதிசயமானவை. ஆச்சர்ய மானவை. நீ அலகிலா விளையாட்டுடையவன். கோகுலத்தையும் பிருந்தாவனத்தையம் எல்லையற்ற இன்ப புரியாக, ஸ்வர்க பூமியாக மாற்றி அமைத்தவன். நாளுக்கு நாள் அங்கே சந்தோஷமும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் மேன் மேலும் அதிகமாக வளர்ந்து கொண்டே போயிற்று. என்னப்பா, என்மீதும் கருணை வைத்து என் நோய் தீர்த்து என்னையும் வாழவைப்பாய் கருணாகரா .