Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 44
44. ''கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா...''.

இது என்ன பேரிடியாக இருக்கிறது. இது வரை மூன்று ராக்ஷஸர்கள் இங்கே படையெடுத்து விட்டார்களே என்று நந்தகோபனும் யசோதையும் தூக்கமின்றி கலங்கினார்கள். ஏன் நமது குழந்தைக்கு இப்படி பேராபத்துகள் ஓன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. குழந்தைக்கு ஒரு வயது நிரம்ப போகிறது அதற்குள் அவன் உயிருக்கு இப்படிப்பட்ட ஆபத்துகள் வர என்ன காரணம். ஏதோ தெய்வ சங்கல்பத்தால், இதுவரை அவன் உயிர் தப்பி இருக்கிறான். முதலில் நமது குருவை அணுகி அவரிடம் விஷயத்தை சொல்லி ஏதாவது பரிகாரம் தேவைப்பட்டால் அதை உடனே செய்வோம் என்று குரு கர்க முனிவரை அணுகினார்கள்.

''குழந்தைக்கு பேர் வைத்துவிட்டீர்களா என்ன பெயர்?'' என்கிறார் கர்க ரிஷி. அவருக்கு நன்றாக தெரியும் கிருஷ்ணன் யார் என்று. ஆகவே நந்தகோபன் யசோதைக்கு ஆறுதல் அளித்தவாறு இப்படி கேட்டார்.

''இன்னும் பெயர் வைக்கும் பண்டிகை கொண்டாடவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் நீங்கள் தான் தான் பெயர் வைக்க உங்களை அழைக்கிறோம். ''

''கிருஷ்ணன்'' என்ற பெயரை வையுங்கள் . ஆனந்தத்தையும் அமைதியையும் தரும் நாமம் கிருஷ்ணன் என்பது. கருமையையும் குறிக்கும். நான் இந்த குழந்தைக்கு ஜாதகம் கணித்து தருகிறேன். அவனைப்பற்றி ஜாதகம் என்ன சொல்கிறது என்றும் உங்களுக்கு விளக்குகிறேன்.''

கர்க ரிஷி தான் ரோகிணி குமாரனுக்கு ராமன் என்று பெயர் வைத்து அவன் பலராமன் என்று உலகம் அறியப்பட்டவன் . இது தான் இந்த தசக சுருக்கம். இனி மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி என்ன சொல்கிறார் குருவாயூரப்பனுக்கு என்று 44வது தசகத்திற்குள் செல்வோம்.

गूढं वसुदेवगिरा कर्तुं ते निष्क्रियस्य संस्कारान् ।
हृद्गतहोरातत्त्वो गर्गमुनिस्त्वत् गृहं विभो गतवान् ॥१॥

guuDhaM vasudeva giraa kartuM te niShkriyasya samskaaraan |
hR^idgatahOraa tattvO gargamunistvad gR^ihaM vibhO gatavaan ||

கூ³ட⁴ம் வஸுதே³வகி³ரா கர்தும் தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காரான் |
ஹ்ருத்³க³தஹோராதத்வோ க³ர்க³முனிஸ்த்வத்³க்³ருஹம் விபோ⁴ க³தவான் || 44-1 ||

குருவாயூரப்பா, கர்க ரிஷி, ப்ரம்ம ஞானி. வானசாஸ்திர புலி. ஹோரை ஜோஸ்ய நிபுணர் என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் . அவரைச் சென்று வணங்கிய வசுதேவர் வேண்டுகோள் படி, அவர் நீ வசித்த கோகுலத்தில் நந்தகோபனின் இல்லத்துக்கு வந்தார். குழந்தைக்கு நாமகரணம் ஜாதகர்மா எல்லாம் பண்ண அவரை விட சிறந்த ஸாஸ்த்ர விற்பன்னர் இல்லையே. கர்க ரிஷி பாக்கியசாலி. த்ரிகாலமும் உன் கட்டளைப்படி நடக்கும்போது உன் எதிர்காலத்தை பற்றி கணிப்பதற்கு கொடுத்து வைத்தவர்.

नन्दोऽथ नन्दितात्मा वृन्दिष्टं मानयन्नमुं यमिनाम् ।
मन्दस्मितार्द्रमूचे त्वत्संस्कारान् विधातुमुत्सुकधी: ॥२॥

nandO(a)tha nanditaatmaa bR^indiShTaM maanayannamuM yaminaam |
mandasmitaardramuuche tvatsamskaaraan vidhaatumutsukadhiiH ||2

நந்தோ³(அ)த² நந்தி³தாத்மா வ்ருந்தி³ஷ்டம் மானயன்னமும் யமினாம் |
மந்த³ஸ்மிதார்த்³ரமூசே த்வத்ஸம்ஸ்காரான் விதா⁴துமுத்ஸுகதீ⁴꞉ || 44-2 ||

நந்தகோபன் குடும்பத்தோடு கர்க ரிஷி காலில் விழுந்து ஆசி வேண்டினான். பரம சந்தோஷத் தோடு அவரை வரவேற்று ஆசனம் அளித்து சகல மரியாதைகளோடும் பக்தியோடும் உனக்கு நாமகரணம் செய்விக்க வேண்டினான். மிகுந்த களிப்போடு ரிஷியும் அவ்வாறே செய்வதற்கு ஒப்புக்கொண்டார்.

यदुवंशाचार्यत्वात् सुनिभृतमिदमार्य कार्यमिति कथयन् ।
गर्गो निर्गतपुलकश्चक्रे तव साग्रजस्य नामानि ॥३॥

yaduvamshaachaaryatvaatsunibhR^itamidamaarya kaaryamiti kathayan |
gargO nirgata pulakashchakre tava saagrajasya naamaani ||3

யது³வம்ஶாசார்யத்வாத்ஸுனிப்⁴ருதமித³மார்ய கார்யமிதி கத²யன் |
க³ர்கோ³ நிர்க³தபுலகஶ்சக்ரே தவ ஸாக்³ரஜஸ்ய நாமானி || 44-3 ||

''ஆஹா பாக்யம் எனக்கு'' என்று புளகாங்கிதமடைந்த கர்க ரிஷி, ''அப்பா நந்தகோபா, நான் யது வம்ச குரு. இந்த நாமகரண சடங்கு ரொம்ப ரஹஸ்யமாக நடத்த வேண்டிய ஒன்று. உனது வீட்டில் இருக்கும் இன்னொரு குழந்தைக்கும் பெயர் வைத்துவிடுகிறேன் அன்று'' என்றார்.

''என் தெய்வமே, குருவாயூரப்பா, உன்மூத்த சகோதரனுக்கும் இவ்வாறு பெயர் வைக்க கர்க ரிஷி தீர்மானித்தார்'

कथमस्य नाम कुर्वे सहस्रनाम्नो ह्यनन्तनाम्नो वा ।
इति नूनं गर्गमुनिश्चक्रे तव नाम नाम रहसि विभो ॥४॥

kathamasya naama kurve sahasranaamnO hyanantanaamnO vaa |
iti nuunaM gargamunishchakre tava naama naama rahasi vibhO ||4

கத²மஸ்ய நாம குர்வே ஸஹஸ்ரனாம்னோ ஹ்யனந்தனாம்னோ வா |
இதி நூனம் க³ர்க³முனிஶ்சக்ரே தவ நாம நாம ரஹஸி விபோ⁴ || 44-4 ||

''என்னப்பா, நாராயணா, உனக்கு ஏன் கர்க முனிவர் ரஹஸ்யமாக பெயரிட வேண்டும் என்று சொன்னார் என்று எனக்கு ஒரு காரணம் புரிகிறது. நீ ஆயிர நாமங்கள் கொண்டவன், அது மட்டுமா, எண்ணற்ற, கணக்கற்ற நாமங்களால் அழைக்கப்படுபவன் என்று அவருக்கு தெரிந்திருக் கலாம். அப்படிப்பட்ட உனக்கு நான் என்ன புதிதாக ஒரு நாமம் சூட்ட முடியும் என்று தயங்கி இருக்கலாம்''

कृषिधातुणकाराभ्यां सत्तानन्दात्मतां किलाभिलपत् ।
जगदघकर्षित्वं वा कथयदृषि: कृष्णनाम ते व्यतनोत् ॥५॥

kR^iShidhaatuNakaaraabhyaaM sattaanandaatmataaM kilaabhilapat |
jagadaghakarShitvaM vaa kathayadR^iShiH kR^iShNa naama te vyatanOt ||5

க்ருஷிதா⁴துணகாராப்⁴யாம் ஸத்தானந்தா³த்மதாம் கிலாபி⁴லபத் |
ஜக³த³க⁴கர்ஷித்வம் வா கத²யத்³ருஷி꞉ க்ருஷ்ணனாம தே வ்யதனோத் || 44-5 ||

''ண'' என்கிற சொல்லுக்கு முன்பும் ''க்ரிஷ்'' எனும் முற்சேர்க்கையை இணைத்து ''க்ருஷ்ண'' என்ற பெயர் உனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். இந்த வார்த்தைக்கு ''உண்மையான ஆனந்தம்'' என்ற அர்த்தம். உலகத்தின் பாபங்கள் அனைத்தையும் அழித்து ஆனந்தம் தருபவன் என்ற அர்த்தமும் கர்க ரிஷி மனதில் தோன்றி இருக்கலாம். '''கிருஷ்ணன்'' என்று இந்த குழந்தைக்கு பெயர் என்று உனக்கு நாமகரணம் செய்துவைத்தார்.

अन्यांश्च नामभेदान् व्याकुर्वन्नग्रजे च रामादीन् ।
अतिमानुषानुभावं न्यगदत्त्वामप्रकाशयन् पित्रे ॥६॥

anyaashcha naamabhedaan vyaakurvannagraje cha raamaadiin |
atimaanuShaanubhaavaM nyagadattvaamaprakaashayan pitre ||

அன்யாம்ஶ்ச நாமபே⁴தா³ன் வ்யாகுர்வன்னக்³ரஜே ச ராமாதீ³ன் |
அதிமானுஷானுபா⁴வம் ந்யக³த³த்த்வாமப்ரகாஶயன்பித்ரே || 44-6 ||

''குருவாயூரப்பா, அப்போது கர்க ரிஷி வேறு சில பெயர்களும் வைத்தார். உன்,மூத்த சகோதரனுக்கு ராமன் என்று பெயரிட்டார். இந்த பெயர்கள் என்ன அர்த்தம் கொண்டவை என்று விவரமாக நந்த கோபனுக்கு விளக்கினார். நீ தான் பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்று ரிஷிக்கு நன்றாக தெரியும், இருந்த போதிலும் அந்த தேவ ரஹஸ்யத்தை எவரிடமும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் ''நந்தகோபா, இந்தக்குழந்தை தெய்வானுக்கிரஹத்தால் தீர்காயுசோடு, சக்திமானாக சாதாரண மான மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் சிறந்த நற்குணங்கள் கொண்டவனாக விளங்கு வான்''என்று பூடக மாக உன் தெய்வீக குணங்களை குறிப்பிட்டார்''.

स्निह्यति यस्तव पुत्रे मुह्यति स न मायिकै: पुन: शोकै: ।
द्रुह्यति य: स तु नश्येदित्यवदत्ते महत्त्वमृषिवर्य: ॥७॥

snihyati yastava putre muhyati sa na maayikaiH punaH shOkaiH |
druhyati yaH sa tu nashyedityavadatte mahattvamR^iShivaryaH ||

ஸ்னிஹ்யதி யஸ்தவ புத்ரே முஹ்யதி ஸ ந மாயிகை꞉ புனஶ்ஶோகை꞉ |
த்³ருஹ்யதி யஸ்ஸ து நஶ்யேதி³த்யவத³த்தே மஹத்த்வம்ருஷிவர்ய꞉ || 44-7 ||

''என்னப்பா கிருஷ்ணா, அப்புறம் அந்த கர்க ரிஷி நந்தகோபனிடம் ''ஆஹா இப்பேற்பட்ட சிறந்த குணாதிசயங்களைக் கொண்ட குழந்தையிடம் வாத்சல்யத்தோடு , அன்பு, பாசம் செலுத்துப வனுக்கு உலக துன்பங்கள், மாயையிடமிருந்து விலக்கு தன்னாலேயே ஏற்பட்டுவிடும். எவர் எதிர்த்தாலும் அவர்களுக்கு நாசம் உறுதி, இந்த குழந்தையை பாசத்தோடு நேசத்தோடு அணுகுபவர் அப்படி கொடுத்து வைத்தவர்கள்'' என்று நந்தகோபனையும் அவனைச் சார்ந்த மற்றவர்களையும் ஸ்லாகித்து புகழ்ந்தார்.

जेष्यति बहुतरदैत्यान् नेष्यति निजबन्धुलोकममलपदम् ।
श्रोष्यसि सुविमलकीर्तीरस्येति भवद्विभूतिमृषिरूचे ॥८॥

jeShyati bahutaradaityaan neShyati nijabandhulOkaM amalapadam |
shrOShyati suvimalakiirtiirasyeti bhavadvibhuutiM R^iShiruuche ||

ஜேஷ்யதி ப³ஹுதரதை³த்யான் நேஷ்யதி நிஜப³ந்து⁴லோகமமலபத³ம் |
ஶ்ரோஷ்யதி ஸுவிமலகீர்தீரஸ்யேதி ப⁴வத்³விபூ⁴திம்ருஷிரூசே || 44-8 ||

''இந்த குழந்தையைப் பற்றி நீ கவலைப்படவே வேண்டாம் நந்தகோபா, இவன் மஹத்தானவன். எந்த அரக்கனும் ராக்ஷஸனும் இவனை நெருங்கமுடியாது. அவனால் அவர்கள் தான் அழிவார்கள். மனதில் உங்களுக்கு எந்த கிலேசமும் வேண்டாம். அவனைச்சுற்றியுள்ளவர்களுக்கும் எந்த துன்பமும் நேராது. அவனைப்பற்றி புகழ்ச்சியான வார்த்தைகள் தான் உன் காதில் விழும் '' என்றார் கர்க ரிஷி.

अमुनैव सर्वदुर्गं तरितास्थ कृतास्थमत्र तिष्ठध्वम् ।
हरिरेवेत्यनभिलपन्नित्यादि त्वामवर्णयत् स मुनि: ॥९॥

amunaiva sarvadurgaM taritaastha kR^itaasthamatra tiShThadhvam |
harirevetyanabhilapannityaadi tvaamavarNayat sa muniH || 9

அமுனைவ ஸர்வது³ர்க³ம் தரிதாஸ்த² க்ருதாஸ்த²மத்ர திஷ்ட²த்⁴வம் |
ஹரிரேவேத்யனபி⁴லபன்னித்யாதி³ த்வாமவர்ணயத்ஸ முனி꞉ || 44-9 ||

''வாதபுரீஸ்வரா, ஹரி, நீ உண்மையில் யார் என்பதை கர்க ரிஷி எவரிடமும் அறிவுறுத்தவில்லை.

''நந்தகோபா, நீ பாக்கியசாலி, உனக்கு வரும் தீங்குகள் எதுவானாலும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். எல்லாம் இந்த குழந்தையின் மஹிமை. ஆகவே நீங்கள் எல்லோரும் இந்த குழந்தையை கண் போல் பாதுகாத்து பாசத்தோடு பக்தி ஸ்ரத்தையும் சேர்த்து அதனிடம் நடந்து கொள்ளுங்கள்'' என்றார் கர்க ரிஷி.

गर्गेऽथ निर्गतेऽस्मिन् नन्दितनन्दादिनन्द्यमानस्त्वम् ।
मद्गदमुद्गतकरुणो निर्गमय श्रीमरुत्पुराधीश ॥१०॥

garge(a)tha nirgate(a)sminnandita nandaadi nandyamaanastvam |
madgatamudgatakaruNO nirgamaya shriimarutpuraadhiisha ||

க³ர்கே³(அ)த² நிர்க³தே(அ)ஸ்மின் நந்தி³தனந்தா³தி³னந்த்³யமானஸ்த்வம் |
மத்³க³த³முத்³க³தகருணோ நிர்க³மய ஶ்ரீமருத்புராதீ⁴ஶ || 44-10 |

''எண்டே குருவாயூரப்பா, அப்புறம் என்ன கேட்கவேண்டுமா, உன்னைக் கண்ணை இமை போல் பாதுகாத்து பெருமையோடு நந்தகோபன் குடும்பத்தாரும் மற்றவர்களும் பரம சந்தோஷத்தோடு பாதுகாத்து வளர்த்தார்கள் என்று நான் சொல்ல வேண்டுமா, நான் சொல்ல வேண்டியது ஒன்று தான். என் தெய்வமே என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷிக்கவேண்டும்.''