Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 47
47. கட்டுண்ட மாயன்

கண்ணன் வளர்கிறான். அவனது விஷமம் அவனை விட வேகமாக வளர்கிறது. எங்கும் அவனைப் பற்றிய பேச்சு. வீடுகளில் எல்லாம் அவன் மேல் வெண்ணை திருடிய குற்றச்சாட்டு. பொறுக்கமுடியாமல் அவன் அம்மா யசோதை அவனை ஒரு கல் உரலில் கட்டிப்போடுகிறாள் என்பது தான் இந்த தசகம் சொல்வது.

एकदा दधिविमाथकारिणीं मातरं समुपसेदिवान् भवान् ।
स्तन्यलोलुपतया निवारयन्नङ्कमेत्य पपिवान् पयोधरौ ॥१॥

ekadaa dadhivimaatha kaariNiiM maataraM samupasedivaan bhavaan |
stanya lOlupatayaa nivaarayannankametya papivaan payOdharau || 1

ஏகதா³ த³தி⁴விமாத²காரிணீம் மாதரம் ஸமுபஸேதி³வான் ப⁴வான் |
ஸ்தன்யலோலுபதயா நிவாரயன்னங்கமேத்ய பபிவான்பயோத⁴ரௌ || 47-1 ||

''குருவாயூரப்பா, ஒருநாள் நீ என்ன செய்தாய் என்று சொல்கிறேன் கேள். உன் அம்மா யசோதை தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள். உனக்கு அவளிடம் பால் குடிக்க வேண்டும். அவள் தயிர் கடைவதை நிறுத்துகிறாய். அவள் மடியில் ஏறி படுக்கிறாய். நீ ஆனந்தமாக அவளிடம் பால் குடிக்கிறாய்.

अर्धपीतकुचकुड्मले त्वयि स्निग्धहासमधुराननाम्बुजे ।
दुग्धमीश दहने परिस्रुतं धर्तुमाशु जननी जगाम ते ॥२॥

ardhapiita kuchakuDmale tvayi snigdhahaasa madhuraananaambuje |
dugdhamiisha dahane parisrutaM dhartumaashu jananii jagaama te ||2

அர்த⁴பீதகுசகுட்³மலே த்வயி ஸ்னிக்³த⁴ஹாஸமது⁴ரானநாம்பு³ஜே |
து³க்³த⁴மீஶ த³ஹனே பரிஸ்ருதம் த⁴ர்துமாஶு ஜனநீ ஜகா³ம தே || 47-2 ||

நீ ஆனந்தமாக உனது சாம்ராஜ்யத்தில் அவள் மடிமேல் ஏறி படுத்துக்கொண்டு பால் குடித்து முடிக்க வில்லை. பாதியில் உன் தாமரைச் செவ்வாயைத் திறந்து சிரிக்கிறாய். ''அடடா, என்ன இப்படிப் பண்ணி விட்டேனே என்று யசோதை வேகமாக எழுந்திருக்கிறாள். அடுப்பில் பாலைக் காய்ச்சியவள் மறந்து போனது ஞாபகம் வருகிறது. பொங்கி வழிந்திருக்குமோ? '' . எழுந்து ஓடினாள்.

सामिपीतरसभङ्गसङ्गतक्रोधभारपरिभूतचेतसा।
मन्थदण्डमुपगृह्य पाटितं हन्त देव दधिभाजनं त्वया ॥३॥

saamipiita rasabhanga sangata krOdhabhaara paribhuuta chetasaa |
mantha daNDamupagR^ihya paaTitaM hanta deva dadhi bhaajanaM tvayaa ||

ஸாமிபீதரஸப⁴ங்க³ஸங்க³த-க்ரோத⁴பா⁴ரபரிபூ⁴தசேதஸா |
மந்த²த³ண்ட³முபக்³ருஹ்ய பாடிதம் ஹந்த தே³வ த³தி⁴பா⁴ஜனம் த்வயா || 47-3 ||

''கிருஷ்ணா, உனக்கு கோபம் வந்துவிட்டது? வராதா பின்னே? இப்படி பாதியில் பால் குடிக்கும் போது கொடுப்பதை நிறுத்திவிட்டு அம்மா எழுந்து போனால்? உன் கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாய்? உன் கண்ணில் அவள் தயிர் கடைந்துகொண்டிருந்த மத்து கண்ணில் பட்டது. அதை எடுத்து அந்தப் பெரிய தயிர் சட்டியின் மேல் வீசினாய். உன் அடியைத் தாங்குமா தயிர் சட்டி? மண்டையை போட்டு விட்டு மோக்ஷம் அடைந்தது. தயிர் வெள்ளம் எங்கும் ஓடியது.

उच्चलद्ध्वनितमुच्चकैस्तदा सन्निशम्य जननी समाद्रुता ।
त्वद्यशोविसरवद्ददर्श सा सद्य एव दधि विस्तृतं क्षितौ ॥४॥

uchchalad dhvanitamuchchakaistadaa sannishamya jananii samaadrutaa |
tvadyashO visaravaddadarshasaa sadya eva dadhi vistR^itaM kshitau ||4

உச்சலத்³த்⁴வனிதமுச்சகைஸ்ததா³ ஸன்னிஶம்ய ஜனநீ ஸமாத்³ருதா |
த்வத்³யஶோவிஸரவத்³த³த³ர்ஶ ஸா ஸத்³ய ஏவ த³தி⁴ விஸ்த்ருதம் க்ஷிதௌ || 46-4 ||

உள்ளே பால் கொதித்து வழியும் சமயம். நல்லவேளை பால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்க முயலும்போது டமால் என்று தயிர் சட்டி உடையும் சத்தம் காதில் விழுந்தது. என்ன ஆச்சு? யசோதை வீட்டின் முன் கட்டுக்கு ஓடி வந்தாள். ''அடாடா, அவள் கடைந்துகொண்டிருந்த தயிர் பானை உடைந்து கிடக்கிறதே. தயிர் அத்தனையும் உருண்டு ஓடுகிறதே.'' உன் சேட்டைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லவேண்டுமா?

वेदमार्गपरिमार्गितं रुषा त्वमवीक्ष्य परिमार्गयन्त्यसौ ।
सन्ददर्श सुकृतिन्युलूखले दीयमाननवनीतमोतवे ॥५॥

vedamaarga parimaargitaM ruShaa tvaamaviikshya parimaargayantyasau |
sandadarsha sukR^itinyuluukhale diiyamaana navaniitamOtave ||5

வேத³மார்க³பரிமார்கி³தம் ருஷா த்வாமவீக்ஷ்ய பரிமார்க³யந்த்யஸௌ |
ஸந்த³த³ர்ஶ ஸுக்ருதின்யுலூக²லே தீ³யமானநவனீதமோதவே || 46-5 ||

''குருவாயூரப்பா, நீ அங்கே இல்லை, குற்றம் நடந்த இடத்தில் உன்னைக் காணவில்லையே?. எங்கே அந்தப் பயல்? வேதங்களால் தேடப்படும் உன்னை அந்த அன்னை தேடினாள் . பின்புறம் ஒரு உரல் மேல் உட்காந்து கொண்டு ஒரு பூனைக்கு வெண்ணெய் ஊட்டிக் கொண்டிருந்தாய். உன்னைப் பார்த்த போது யசோதைக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?

त्वां प्रगृह्य बत भीतिभावनाभासुराननसरोजमाशु सा ।
रोषरूषितमुखी सखीपुरो बन्धनाय रशनामुपाददे ॥६॥

tvaaM pragR^ihya bata bhiiti bhaavanaa bhaasuraanana sarOjamaashu saa|
rOSha ruuShita mukhii sakhiipurO bandhanaaya rashanaamupaadade ||6

த்வாம் ப்ரக்³ருஹ்ய ப³த பீ⁴திபா⁴வனாபா⁴ஸுரானநஸரோஜமாஶு ஸா |
ரோஷரூஷிதமுகீ² ஸகீ²புரோ ப³ந்த⁴னாய ரஶனாமுபாத³தே³ || 47-6 ||

கோபம் உச்சிக்கேறி விட்டது யசோதைக்கு. பளிச்சென்று ஒளி வீசும் தாமரை முகத்தைஉடைய கண்ணா,உன்னை கர கர வென்று பிடித்து இழுத்தாள். உன் நண்பர்கள் வேறு உன்னை சூழ்ந்து கொண்டு நீ இருக்கும் இடத்தில் பூந்தேன் குடிக்க வட்டமிடும் வண்டுகள் போல் சுற்றிக்கொண்டு இருந்ததை வேறு பார்த்தாள் . நீ பயந்தது போல் நடித்தாய். மாயா ஜாலக்காரன் ஆயிற்றே நீ. யசோதையின் கண்கள் கோபத்தோடு அங்கும் இங்கும் பார்த்தன. அவள் கண்ணில் மணிக்
கயிறுகள் சில தென்பட்டன. தாம்புக்கயிறுகள் . கன்றுக்குட்டிகளை கட்டிப்போட உபயோகிப்
பவை..

बन्धुमिच्छति यमेव सज्जनस्तं भवन्तमयि बन्धुमिच्छती ।
सा नियुज्य रशनागुणान् बहून् द्व्यङ्गुलोनमखिलं किलैक्षत ॥७॥

bandhumichChati yameva sajjanastaM bhavantamayi bandhumichChatii |
saa niyujya rashanaaguNaan bahuun dvyangulOnamakhilaM kilaikshata || 7

ப³ந்து⁴மிச்ச²தி யமேவ ஸஜ்ஜனஸ்தம் ப⁴வந்தமயி ப³ந்து⁴மிச்ச²தி |
ஸா நியுஜ்ய ரஶனாகு³ணான்ப³ஹூன் த்³வ்யங்கு³லோனமகி²லம் கிலைக்ஷத || 47-7 ||

என் தெய்வமே, எவர்க்கும் இதுவரை தோன்றாத ஒரு எண்ணம் அந்த புண்யவதிக்கு, பாக்ய சாலிக்கு தோன்றியது. உன்னைக் கட்டிப்போட வேண்டும் என்று முடிவெடுத்தாள் . உன்னோடு சேர வேண்டும், உன்னோடு பிணையவேண்டும் என்று எத்தனையோ யோகிகள், மஹான்கள், ரிஷிகள் காத்திருக்கிறார்கள். எவர் பிடிக்கும் அகப்படாதவன் நீ. கயிறு நீளம் போதவில்லை உன்னைக் கட்ட, பல கயிறுகள் எடுத்து முயன்றாள். உன்னைக் கட்ட எந்த கயிறுக்கும் நீளம் போதவில்லையே? ஒரு சில அங்குலங்கள் குறைவாகவே இருந்தன.

विस्मितोत्स्मितसखीजनेक्षितां स्विन्नसन्नवपुषं निरीक्ष्य ताम् ।
नित्यमुक्तवपुरप्यहो हरे बन्धमेव कृपयाऽन्वमन्यथा: ॥८॥

vismitOtismata sakhiijanekshitaaM svinnasannavapuShaM niriikshya taam |
nityamuktavapurapyahO hare bandhameva kR^ipayaa(a)nvamanyathaaH || 8

விஸ்மிதோத்ஸ்மிதஸகீ²ஜனேக்ஷிதாம் ஸ்வின்னஸன்னவபுஷம் நிரீக்ஷ்ய தாம் |
நித்யமுக்தவபுரப்யஹோ ஹரே ப³ந்த⁴மேவ க்ருபயான்வமன்யதா²꞉ || 47-8 ||

என்னப்பனே ,ஹரி, யசோதையின் கோபி மார் தோழிகள் கூடிவிட்டனர். சிரித்துக்கொண்டே உன்னைக் கட்டிப்போடும் காட்சியை வேடிக்கை பார்த்தார்கள். கயிறுகள் ஒவ்வொன்றாய் எடுப்பதும் உன்னை சுற்றுவதும், அது போதாமல் எறிந்துவிட்டு அடுத்த கயிற்றை எடுத்து உன் இடுப்பில் சுற்றுவதுமாக வியர்க்க விறுவிறுக்க யசோதை கஷ்டப்படுவதை கண்டு சிரிப்பு வந்தது. பாவமாக இருந்தது, உன்னைக் கட்டிப்போடுவதும், அவள் கட்டிப்போட முயல்வதும் ரெண்டுமே தான். உன் உருவம் எவராலும் கட்டிப்போட முடியும்படி யானதா? பாவம் அம்மா, என்று அவள் மேல் பரிதாபத்தோடு உன்னை கட்டும் அவள் முயற்சிக்கு இடம் கொடுத்தாய். கட்டுண்ட மாயன் நீ. எதற்கும் எவருக்கும் கட்டுப்படாதவன் நீ பாசத்துக்கு கட்டுப்பட்டாய். பாசம் என்றாலும் கயிறு தானே.

स्थीयतां चिरमुलूखले खलेत्यागता भवनमेव सा यदा।
प्रागुलूखलबिलान्तरे तदा सर्पिरर्पितमदन्नवास्थिथा: ॥९॥

sthiiyataaM chiramuluukhale khaletyaagataa bhavanameva saa yadaa |
praaguluukhalabilaantare tadaa sarpirarpita madannavaasthithaaH ||

ஸ்தீ²யதாம் சிரமுலூக²லே க²லேத்யாக³தா ப⁴வனமேவ ஸா யதா³ |
ப்ராகு³லூக²லபி³லாந்தரே ததா³ ஸர்பிரர்பிதமத³ன்னவாஸ்தி²தா꞉ || 47-9 ||

''அப்பாடா, இந்த விஷமக்காரனுக்கு தக்க தண்டனை கொடுத்தாகிவிட்டது'' என்று ஒருவழியாக திருப்தி பெருமூச்சுடன் யசோதை உன்னை அந்த கல் உரலோடு சேர்த்து கயிற்றால் உன் இடுப்பை கட்டிவிட்டு உள்ளே சென்றாள். எல்லோர் எதிரிலும் ''நீ செய்கிற விஷமத்துக்கு இது தான் தண்டனை. இங்கேயே கொஞ்ச நேரம் கட்டுண்டு கிட. அப்போது தான் புத்தி வரும்'' என்று சொன்னாள் .
நீ காதில் வாங்கவில்லை. உரலுக்கு உள்ளே நீ ஒளித்து வைத்திருந்த வெண்ணையை எடுத்து ரசித்து சாப்பிட ஆரம்பித்தாய்.

यद्यपाशसुगमो विभो भवान् संयत: किमु सपाशयाऽनया ।
एवमादि दिविजैरभिष्टुतो वातनाथ परिपाहि मां गदात् ॥१०॥

yadyapaasha sugamO vibhO bhavaan sanyataH kimu sapaashayaa(a)nayaa |
evamaadi divijai-rabhiShTutO vaatanaatha paripaahi maam gadaat || 10

யத்³யபாஶஸுக³மோ விபோ⁴ ப⁴வான் ஸம்யத꞉ கிமு ஸபாஶயா(அ)னயா |
ஏவமாதி³ தி³விஜைரபி⁴ஷ்டுதோ வாதனாத² பரிபாஹி மாம் க³தா³த் || 47-10 ||

எண்டே குருவாயூரப்பா, ப்ரபோ, விண்ணிலுள்ள தேவர்கள் எல்லாம் உன்னை புகழ்ந்து பாடினார்கள். ஒரு கேள்வி அவர்கள் கேட்டது இன்னும் காதில் ஒலிக்கிறது. ''ஸ்வாமி, எந்த பாச பந்தத்தோடும் பிணை படாமல் இருப்பவர்களுக்கு தானே நீ தென்படுபாய். எந்த பிணைப்பும் அற்றவர்கள் தானே உன்னை அடைய முடியும்? உன்னை இணைபிரியாத பாசபிணைப்பில் உள்ள அன்னை யசோதா எப்படி உன்னைத் தனியாக பிரிந்து இருக்க கட்டிப்போட்டாள் ?'' என்னப்பனே , என்னைப்பார், நான் இந்த நோயின் இக்கட்டில் தவிக்கிறேன், என் நோய் தீர்த்து என்னை விடுவித்து ரக்ஷிப்பாயாக.